என் வயது 38. இரவில் பல நாள்களுக்கு சப்பாத்தி அல்லது கோதுமை தோசைதான் சாப்பிடுகிறேன். இப்படிச் சாப்பிடும் நாள்களில் வயிற்று வலி, வயிற்று உப்புசம், அடுத்தநாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன. மற்ற நாள்களில் இப்படி இருப்பதில்லை. இதை கோதுமை அலர்ஜி என எடுத்துக் கொள்ளலாமா? இரவு உணவுக்கு சப்பாத்தி, கோதுமை தோசை சாப்பிடுவது சரியானதா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு க்ளூட்டன் அலர்ஜி என்கிற ஒவ்வாமை இருக்கலாம் என்று தெரிகிறது. க்ளூட்டன் என்பது ஒரு வகை புரதம்.
கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் இந்த க்ளூட்டன் அதிகம் காணப்படுகிறது. க்ளூட்டன் உள்ள உணவுப்பொருள்கள் ஒட்டும் தன்மை கொண்டவையாக இருக்கும். நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதால் பிரட், பிஸ்கட், ரஸ்க் உள்ளிட்ட பேக்கரி உணவு வகைகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வயதானவர்களுக்கு க்ளூட்டன் அலர்ஜி ஏற்படுவது சகஜம். அரிதாக இள வயதினருக்கும் இது ஏற்படலாம். அதாவது இந்தப் புரதத்தை அவர்களால் ஜீரணிக்க முடியாமல் போகும். நீங்கள் கோதுமை உணவுகளை எடுத்துக் கொள்ளும் நாள்களில் இப்படி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
உண்மையில் நீங்கள் கவனித்துப் பார்த்தால் கோதுமை உணவுகள் மட்டுமல்ல, மைதா, ரவை, சேமியா, பிரெட் போன்றவற்றைச் சாப்பிடும் நாள்களிலும் உங்களுக்கு இந்த அறிகுறிகள் வரலாம்.
நீங்கள் ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரை அணுகி, உங்களுடைய அறிகுறிகளை விளக்கி, இது க்ளூட்டன் அலர்ஜிதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய உணவுப்பழக்கம், தினசரி உங்கள் உணவுகள் என உணவு டைரி ஒன்றை வைத்து அதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். க்ளூட்டன் அலர்ஜி உறுதியானால் க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளுக்கு மாற வேண்டியிருக்கும்.
தினை, மக்காள்சோளம், பழுப்பரிசி, பழங்கள், காய்கறிகள், முட்டை, தண்டுக்கீரை விதை மாவு, கீன்வா என க்ளூட்டன் ஃப்ரீ உணவுகள் குறித்து உங்கள் ஊட்டச்சத்து ஆலோசகரோ, மருத்துவரோ விளக்குவார்.
வெளியிடங்களில் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் அதில் க்ளூட்டன் உள்ள பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை செக் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். க்ளூட்டன் ஃப்ரீ உணவுப்பழக்கத்துக்கு மாறினாலே இந்தப் பிரச்னை தானாகச் சரியாகும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News
0 Comments