மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு உத்தவ் தாக்கரேயும், அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டேயும் தங்களுக்கு ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருவரும் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கவேண்டும் என்று கோரி மனுக்கொடுத்துள்ளனர். இதையடுத்து வரும் 8-ம் தேதிக்குள் இரண்டு அணிகளும் தங்களது ஆதரவாளர்கள் பட்டியலை கொடுக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேயிக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எண்ணிக்கை தங்களுக்கு அதிகமாக இருப்பதாக காட்ட உத்தவ் தாக்கரே தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு மறைந்த பால் தாக்கரே மருமகள் ஸ்மிதா தாக்கரே முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தற்போது பால் தாக்கரேயின் பேரன் நிஹர் தாக்கரேயும் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து அவரின் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
நேற்று நிஹர், ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பால் தாக்கரேயின் மகன் பிந்து மாதவ் மகன் தான் நிஹர் தாக்கரேயாகும். பிந்து மாதவ் கடந்த 1996-ம் ஆண்டு இறந்து போனார். தற்போது நிஹர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதோடு பாஜக தலைவர்களில் ஒருவரான ஹர்ஷ்வர்தன் பாட்டீல் மகள் அங்கிதாவை திருமணம் செய்துள்ளார். நிஹர் தாக்கரே ஏக்நாத் ஷிண்டேயிக்கு ஆதரவு கொடுத்திருப்பது அதிருப்தி கோஷ்டிக்கு பிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
தாக்கரே குடும்பத்தினரும் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்து வருவது உத்தவ் தாக்கரேயிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உத்தவ் தாக்கரே தனது தந்தை இருந்த போதே தனது சகோதரர்களை ஓரங்கட்டிவிட்டு கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் அமைச்சர்களை 65:35 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. 35 சதவீத அமைச்சர்கள் ஷிண்டே அணிக்கு வழங்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
from Latest News
0 Comments