மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவில் உள்ள குராயூரை சேர்ந்தவர் லட்சுமி(31, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இவரை பிரிந்து சென்றுவிட்டார். தற்போது லட்சுமி தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளுடன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தங்கியிருந்து சிறியதாக துணிக்கடை நடத்தி பிழைத்து வருகிறார். இந்நிலையில், அவருக்கும், தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் லாரி டிரைவராக வேலை பார்க்கும் பாலாஜி (21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
நாளடைவில், பாலாஜியும் லட்சுமியும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாலாஜியின் பெற்றோர், வயதுக்கு முரணான இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாஜியை அடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரின் வீட்டுக்கு நியாயம் கேட்டுச் சென்ற லட்சுமியை, பாலாஜியின் உறவினர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரின் குழந்தைகளின் எதிர்காலத்தை குறிப்பிட்டும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்து மாயமான பாலாஜி, மதுரை தணிக்கன்குளத்தில் லட்சுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த, தகவலையறிந்த பாலாஜியின் பெற்றோர், அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளர் பார்த்திபன், சார்பு ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உதவியுடன் மதுரையிலிருந்து பாலாஜியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், விரக்தியடைந்த லட்சுமி, தனது கணவரை மீட்டுத்தரக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது பிள்ளைகளுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், துரிதமாக செயல்பட்டு தீக்குளிக்க முயன்ற 3 பேரின் மீதும் தண்ணீர் ஊற்றி ஆற்றுப்படுத்தினர். தொடர்ந்து, அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து சூலக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Latest News
0 Comments