சென்னை, சௌகார்பேட்டை, ஆதியப்பன் நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரவி (35). இவர் 28.7.2022-ம் தேதி சௌகார்பேட்டை பகுதியில் உள்ள காலியிடத்தில் தலையில் காயங்களுடன் இறந்துகிடப்பதாக பூக்கடை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ரவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரவியின் மரணம் தொடர்பாக அவரின் நண்பர் சீனிவாசன், பூக்கடை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து பூக்கடை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரவியின் மரணத்துக்கான காரணம் தெரியவந்தது.
இது குறித்து பூக்கடை போலீஸார் கூறுகையில், ``பூக்கடை பகுதியில் கடந்த 28.7.2022-ம் தேதி நடந்த சவ ஊர்வலத்தில் ரவி, அவரின் நண்பர்கள் தீனா என்கிற காக்கா தீனா, திலீப்குமார், சிறுவன் என 4 பேர் பங்கேற்றுள்ளனர். பின்னர் அவர்கள் ரவியிடம் மது கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஏற்பட்ட தகராறில் ரவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர். அதனால் ரவி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து ரவியைக் கொலைசெய்த குற்றத்துக்காக சௌகார்பேட்டையைச் சேர்ந்த தீனா, மணலியைச் சேர்ந்த திலீப்குமார் ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். அவர்களிடமிருந்து ஒரு கத்தி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். கைதான தீனா, யானைக்கவுனி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர்மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளன. தலைமறைவாக உள்ள சிறுவனைத் தேடிவருகிறோம்"என்றனர்.
from Latest News
0 Comments