கடந்த 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி ஜாபர்சேட்டுக்கு வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அப்போதைய வீட்டு வசதி வாரிய அமைச்சரும், தற்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் நேற்று முன் தினம் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது.
வழக்கின் பின்னணி:
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரியாக திகழ்ந்தவர் ஜாபர் சேட். இவர் தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி., சிபிசிஐடி டிஜிபி, தீயணைப்புத்துறை டிஜிபி என பல உயர் பதவிகளை வகித்தவர். இவரது மகள் மற்றும் மனைவி பெயரில் திருவான்மியூர் புறநகர் பகுதியில் சமூக சேவகர்களுக்கான பிரிவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு வணிக வளாக கட்டிடம் கட்டி இயக்கி வந்ததும், ஜாஃபர் சேட்டின் மனைவி வெளிநாட்டு பணங்களை பரிவரத்தனை செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜாஃபர் சேட்டின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜாஃபர் சேட், தான் ஐபிஎஸ் அதிகாரி என்றும் மத்திய அரசின் அனுமதி இன்றி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து ஜாஃபர் சேட் மீதான குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. வெளிநாட்டு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதால் 2020-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை இந்த வழக்கை கையில் எடுத்தது.
ஜாபர் சேட்டிடம் விசாரணை:
கடந்த மாதம் 20-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ஜாபர் சேட்டிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. நில ஒதுக்கீடு செய்யப்பட்ட காலகட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு அமலாக்கத்துறை சார்பில் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. கண்புரை அறுவைச் சிகிச்சை, கட்சிப்பணி, ஆட்சிப்பணி காரணமாக அமைச்சர் ஐ.பெரியசாமியால் கடந்த மாதம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.
அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விசாரணை:
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் விழாவிற்கு பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முந்தைய தினம் (ஜூன் 27) சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. எந்த இடத்திலும் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக தாம் செயல்படவில்லை என்றும் பல முறை அமைச்சராக இருந்தும் சென்னையில் இன்னும் ஒரு சதுர அடி நிலம் கூட தனக்கு சொந்தமாக இல்லை எனவும் கூறியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டியளித்தார். அமலாக்கத்துறை விசாரணை மட்டுமல்ல; எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் கூறினார்.
இரவு வரை நீடித்த விசாரணை:
வழக்கமாக அமலாக்கத்துறை தரப்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மாலை 6 மணிக்கே பெரும்பாலும் முடிவடைந்து விடும். மேலதிக விசாரணைக்காக மற்றொரு நாள் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிடுவார்கள். ஆனால் தமிழகத்தின் சீனியர் அமைச்சர் ஒருவரிடம் இரவு 11 மணி வரை விசாரணை நடத்தி இருக்கிறது அமலாக்கத் துறை. அதுவும் செஸ் ஒலிம்பியாட் விழாவிற்கு பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முந்தைய தினம் இந்த நெடு நேர விசாரணை நடைபெற்றிருக்கிறது. ஆவணங்களில் கையெழுத்து வாங்குவதில் தாமதம், இந்தி & ஆங்கிலம் மட்டும் தெரிந்த அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையேயான மொழிப்பெயர்ப்பு சிக்கல் ஆகியவையும் இந்த நீ.....ண்ட விசாரணைக்கு காரணம் என்று சொல்லப்பட்டது.
வருத்தத்தில் அமைச்சர்?
அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் அமைச்சர் ஐ.பெரியசாமி உற்சாகமாக பேட்டியளித்த போதிலும், மனதளவில் அவர் வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனியர் அமைச்சரான தன்னிடன் இவ்வளவு மணி நேரம் விசாரணை நடைபெற்ற போதிலும், கட்சித் தலைமையிடம் இருந்து ஆறுதலாக கருத்துகள் வராதது, சந்திக்க கூட பெரிய ஆட்கள் வராதது அமைச்சரின் வருத்தத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பங்கேற்காமல் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments