திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த 22 இளைஞர் ஒருவர், ஆற்காடு பகுதியிலிருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஆம்பூர் வந்த மத்திய உளவுத்துறையின் சிறப்புப் புலனாய்வு பிரிவின் ( IB INTELLIGENCE BUREAU - SIU SPECIAL INVESTIGATION UNIT) வேலூர் மற்றும் மதுரையைச் சேர்ந்த அதிகாரிகள் நீலிக்கொல்லை பகுதியிலிருக்கும் இந்த மாணவரின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து அவரைச் சுற்றி வளைத்தனர்.
சந்தேகிக்கும் வகையில் வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பிலிருந்ததற்காக விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி, அவர் பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப்கள், சிம் கார்டுகள், எலக்ட்ரானிக் உபரகரணங்களையும் பறிமுதல் செய்ததோடு, அதே பகுதியிலிருக்கும் அவரின் உறவினர்கள் சிலரது வீடுகளிலும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த மாணவரை அணைக்கட்டு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்த மாணவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்களை மத்திய உளவுத்துறையின் சிறப்புத் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவற்றிலிருந்த விவரங்களையும் மீட்டனர். அதில் சிக்கிய ஆதாரங்களில் அந்த மாணவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்து நேரடி தொடர்பிலிருப்பதும், வெளிநாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு தீவிரவாத அமைப்புகள் மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு ஆதரவாக அவர்களின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் செயல்பட்டதும் தெரியவந்தது.
மேலும், ஆம்பூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரைக் கொல்லவும், பல்வேறு இடங்களில் குண்டு வைக்கவும் சதித்திட்டம் தீட்டியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 15 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அந்த மாணவன் சிறப்புப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், ஆம்பூர் டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அணைக்கட்டு காவல் நிலையத்திலிருந்து ஆம்பூர் நகர காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட அவர்மீது இந்திய இறையாண்மை சட்டத்திற்கு எதிராக செயல்படுதல், நாட்டிற்கு எதிராகப் போர் தொடுப்பதற்கு உதவுதல், நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் பிணையில் வெளிவராத சட்டங்களின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்து, சிறையிலடைத்தனர்.
from Latest News
0 Comments