காரைக்காலை ஆன்மீகம், வரலாறு, தொன்மை பொதிந்த அழகான சுற்றுலா நகரமாக உருவாக்கப் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காரைக்கால் கடற்கரையைச் சுற்றுலா மையமாக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கடற்கரையில் புதுச்சேரி சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான சீகல்ஸ் ஹோட்டல் புதுப்பிக்கப்படுகிறது. இங்கு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை நினைவூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்பட பேரரங்கம் ஒன்று அமைக்கப்படவிருக்கிறது.
அரசலாற்றில் மீண்டும் படகுப் போக்குவரத்து தொடங்க இறங்கு தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், படகுத் துறைக்கான தடுப்புகள், கூடாரம், குடைகள் போன்றவை அங்கு உருவாக்கப்பட்டு வருகின்றன.
கடற்கரையை ஒட்டி சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட 23 ஏக்கர் பரப்பிலான அலையாத்திக் காடுகளோடு, ஓசோன் பூங்கா மற்றும் பொழுது போக்கு சாதனங்களை உருவாக்கும் பணிகளும் நடக்கின்றன.
இதுகுறித்து சமீபத்தில் பதவியேற்ற கலெக்டர் முகமது மன்சூரிடம் பேசினோம்.
"75-வது சுதந்திர தினத்தை எதிர் வரும் சந்ததியினர் நினைவில் வைத்திருக்கும் வகையில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு சாதனங்கள் மற்றும் வரலாற்றுக் கண்காட்சிகள் இடம் பெறுகின்றன. சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்கள், தியாகிகள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பெண்கள் போன்றவர்களின் அபூர்வ புகைப்படங்களும் இந்தக் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
மேலும், சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சின்னங்கள், நினைவிடங்கள் போன்றவை புத்தாக்கம் பெற்றிட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இதன் மூலம் ரயில், பேருந்து, கார்களில் காரைக்காலைக் கடந்து போகிற வெளியூர் பயணிகள், குறைந்தது 3 மணி நேரமாவது காரைக்காலில் மகிழ்வுடன் நேரத்தைச் செலவிட்டுச் செல்லும் வகையில் இந்தச் சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது" என்றார்.
from Latest News
0 Comments