Ticker

6/recent/ticker-posts

Ad Code

50 கோடி பணம்: ``எனது வீடு தான்... ஆனால் எனக்கே அனுமதி இல்லை” - மே.வங்க அமைச்சரின் உதவியாளர்

மேற்குவங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரை அமலாக்கத்துறை கைதுசெய்து விசாரித்து வருகிறது. இவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு முந்தைய நாள், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 21 கோடி ரூபாய் ரொக்கமாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், `பார்த்தா சாட்டர்ஜி தனது வீட்டை ஒரு மினி வங்கியாகப் பயன்படுத்தினார்’ என அர்பிதா முகர்ஜி தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது

மேலும், கடந்த புதன்கிழமையன்று அர்பிதா முகர்ஜியின் மற்றொரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 29 கோடி ரூபாயை மீட்டனர். இந்தநிலையில், பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு செல்ல தனக்கே அனுமதியில்லை இல்லையென்று அர்பிதா முகர்ஜி கூறியதாக அமலாக்கத்துறை அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அந்த அதிகாரி, ``அர்பிதா முகர்ஜி, பணம் பார்த்தா சாட்டர்ஜிக்கு சொந்தமானது என்றும், அவரும் அவரின் ஆட்களும் தனது வீடுகளுக்கு வந்து பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறினார். மேலும், பணம் இருப்பது தனக்கு தெரியும் என்றும், ஆனால் அந்த அறைக்கு செல்ல தனக்கு அனுமதியில்லாததால் ஆங்கு எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியாது என்றும் அர்பிதா முகர்ஜி கூறினார்.

நடிகை அர்பிதா முகர்ஜி

மேலும் சினார் பார்க்கில் அர்பிதா முகர்ஜி-க்கு சொந்தமான மற்றொரு வீட்டில் ஏஜென்சி நேற்று சோதனை நடத்தியது. அதிகாரிகள் அங்கு எதாவது மீட்டார்களா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. அவரின் மற்ற வீடுகளைப் போலவே இங்கும் பணம் இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று கூறினார்.

மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தால் திரிணாமுல் கட்சி, பார்த்தா சாட்டர்ஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதோடு, கட்சியிலிருந்து இடைநீக்கமும் செய்திருக்கிறது.



from Latest News

Post a Comment

0 Comments