எனக்கு வயது 49. கடந்த மாதங்களாக பீரியட்ஸ் வந்தால் மூன்று மாதங்கள் வரைகூட தொடர்கிறது. மாதவிலக்கு நிற்கும் நேரத்தில் அப்படித்தான் இருக்கும் என்கிறார் என் அம்மா. அது உண்மையா? இது மெனோபாஸின் அறிகுறியா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்க வாய்ப்புள்ளதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
40 வயதைக் கடந்த பல பெண்களும் `மெனோபாஸ் வரப்போகுது... பீரியட்ஸ் நிக்கறதுக்கு முன்னாடி இப்படித்தான் கன்னாபின்னானு ப்ளீடிங் ஆகுமாமே...' என்று சொல்லிக் கொண்டு வருவதைப் பார்க்கிறேன்.
வெளிறிப்போன அவர்களது சருமமே ரத்தச்சோகையைக் காட்டிக் கொடுக்கும். தொடர் ரத்தப்போக்கால் ரத்தச்சோகையின் உச்சத்தில் நடக்கவே முடியாத நிலையில் வருபவர்களும் உண்டு. முதலில் அவர்களுக்கு ரத்தம் ஏற்றி, உடலைத் தேற்றிவிட்டுத்தான் சிகிச்சையை ஆரம்பிப்போம். வழக்கமாக 3 நாள்கள் மட்டுமே இருக்கும் ரத்தப்போக்கு திடீரெ
ன ஒரு மாதம், 5 நாள்களைக் கடந்தும் தொடர்ந்தால், அதை அலட்சியம் செய்யாமல் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் போய்விட்டால் ஹார்மோன்கள் அல்லாத மருந்துகளின் மூலமே பிரச்னையைச் சரிசெய்து விடுவார்கள்.
சராசரியாக ஒரு மாதவிலக்கு சுழற்சியில் வெளியேறும் ரத்தத்தின் அளவு, 80 மில்லிதான் இருக்க வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நாப்கின்கள் மாற்றும் அளவுக்கான ரத்தப்போக்கு இருக்கலாம். அதைத் தாண்டும்போது, அது அதிகப்படியான ப்ளீடிங் என்று உணர வேண்டும்.
45 வயதுக்குப் பிறகு, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், மாதவிலக்கு சுழற்சி முறைதவறிப் போகும். சிலருக்கு அதிக ரத்தப்போக்கும் சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம்.
மெனோபாஸின் அறிகுறியாக ரத்தப்போக்கு அதிகரிக்கிறது என வைத்துக் கொண்டாலும், அது அந்தப் பெண்ணின் உடல்நலனை பாதிக்கும். மெனோபாஸ் காலத்தில் எண்டோமெட்ரியத்தின் அடர்த்தியானது 4 மி.மீட்டர் அளவுதான் இருக்க வேண்டும்.
பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலத்தில் அது 6 மி.மீட்டர்வரை இருக்கலாம். இதற்கு மேல் அடர்த்தியாக இருந்தால் ஹார்மோன்கள் கொடுத்துச் சரி செய்யலாம் அல்லது கர்ப்பப்பையின் உள்ளே உள்ள திக்கான எண்டோமெட்ரியத்தை, `ஹிஸ்ட்ரோஸ்கோப் எண்டோமெட்ரியல் அப்ளேஷன் முறையில் சுரண்டி எடுத்துவிடலாம். அதன்பிறகு ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும்.
எனவே, உங்கள் பிரச்னைக்கு மெனோபாஸ் வரப்போவதுதான் காரணம் என நீங்களாக நினைத்துக் கொண்டு அலட்சியமாக இருக்காதீர்கள். ரத்தச்சோகை அதிகரித்தால் அது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பது நினைவிருக்கட்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News
0 Comments