சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேர் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை பிற மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக காசிமேடு திடீர் நகரில் தங்கி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சம்பந்தம் (58), தர்மலிங்கம்(45), சக்தி(45), கமலநாதன்(47) ஆகிய 4 மீனவர்களும் அதிகாலை 2 மணியளவில் ஃபைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். வழக்கமாக காலை 10 மணிக்கு கரை திரும்பும் மீனவர்கள், மாலையாகியும் கரை திரும்பாததால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாக் அவர்கள் தேடும் பணியில் ஈடுபடவில்லை என்றும் மீனவர்கள் குற்றச்சாட்டை வைத்தனர். அதன்பிறகு 10 மீனவர்கள் 2 ஃபைபர் படகுகள் மூலம் அவர்கள் இருக்கும் திசையை நோக்கி சென்றனர். 37 நாடிகள் தூரத்தில் படகு கவிழ்ந்து அதன்மேல் மயக்க நிலையில் சம்பந்தம், தர்மலிங்கம், சக்தி, கமலநாதன் ஆகியோர் இருந்துள்ளனர். உடனே அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுக்கப்பட்டு படகுகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மீட்புப்பணியில் ஈடுபட்ட மீனவர்கள் கூறுகையில், நேற்றுகாலை பத்து மணிக்கு வரவேண்டிய மீனவர்கள் மறுநாள் அதாவது இன்று 1 மணிக்கு கரைக்கு வந்து சேர்ந்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்களிடம் கேட்டபோது, எதிர்பாராத விதமாக காற்று அதிகமாக வீசியதில் படகு கவிழ்ந்து நாங்களும் தண்ணீரில் மூழ்கினோம். பிறகு மூழ்கிய படகில் ஏறி அமர்ந்து அந்த திசையை நோக்கி வரும் படகுகளை எதிர்பார்த்து கைகளையும் கொடிகளையும் காட்டி உதவிகளை கேட்டோம். யாரும் வரவில்லை. எங்களை மீட்க வந்த படகுகளை நாங்கள் பார்த்த பிறகுதான் உயிர் தப்பியது என்று நினைத்ததாகக் கூறினார். கரைக்கு வந்த மீனவர்களை அவருடைய மனைவி, குழந்தைகள் கட்டிதழுவி ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments