ஈரோட்டில் பெற்ற தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து கொண்டு, தனது 16 வயது மகளை மிரட்டி, மகளின் வயிற்றிலிருந்து கருமுட்டையை எடுத்து விற்பனை செய்துவந்த விவகாரம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. `ஈரோடு, சேலம், ஒசூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கருமுட்டையை எடுத்து விற்பனை செய்ததோடு, தாயின் ஆண் நண்பர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்’ பாதிக்கப்பட்ட சிறுமி கண்ணீர் மல்க போலீஸில் புகார் அளித்திருந்தார். அதையடுத்து சிறுமியின் தாய் இந்திராணி, அவருடைய ஆண் நண்பர் சையத் அலி, கருமுட்டை விற்பனையில் புரோக்கராகச் செயல்பட்ட மாலதி மற்றும் சிறுமிக்கு போலியான ஆதார் அட்டையினை தயாரித்துக் கொடுத்த ஜான் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தார். இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட மருத்துவக் குழுவினர் மற்றும் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காப்பகத்தில் இருந்த சிறுமி திடீரென கழிவறையை சுத்தம் செய்யும் ரசாயனத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதையடுத்து சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து சிறுமியிடம் போலீஸார் மற்றும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுமியின் வயிற்றிலிருந்து கருமுட்டையை எடுத்து விற்பனை செய்தது, தாயினுடைய ஆண் நண்பர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது, இந்த விவகாரம் பெரிதாகி பரபரப்பை உண்டாக்கியது போன்றவையெல்லாம் சிறுமிக்கு கடும் மன அழுத்ததைக் கொடுத்திருக்கிறது. மேலும், காப்பகத்தில் இருந்த சிறுமி இதனையெல்லாம் நினைத்து கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.
பெற்ற தாயே தன்னுடைய வாழ்க்கையை சீரழித்துவிட்டார் என்பதனை தாங்க முடியாமல் ‘எதுக்கு எனக்கு மட்டும் இவ்ளோ பிரச்னை நடக்குது. நான் செத்துப் போயிட்டா எல்லா முடிஞ்சிடும்ல’ என சிறுமி கழியவறையை சுத்தம் செய்யும் ரசாயனத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் உள்ள சிறுமி சிகிச்சைக்குப் பிறகு, மனநல ஆலோசனைகள் கொடுக்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
from Latest News
0 Comments