Ticker

6/recent/ticker-posts

Ad Code

``உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்” - அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக?

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக செயல்படுகின்றனர். அவர்களை வைத்து ஆட்சியமைக்க பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடந்த 20-ம் தேதியில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது வரும் ஜூலை 12-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அவசரமாக டெல்லி சென்று பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

சட்டமன்றத்திற்கு வெளியில் பட்னாவிஸ்

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஆட்சியமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை அனுமதி கொடுத்தது. உடனே மும்பை வந்த தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தலைவர்களுடன் ஆளுநர் பகத் சிங் கோஷாரியாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் ஒன்றையும் கொடுத்தார். ``சட்டமன்றத்தில் உடனே உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 39 எம்.எல்.ஏ.க்கள் அரசில் இடம் பெறவிரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

எனவே உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சஞ்சய் ராவத் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார். இதே போன்று மற்ற சிவசேனா தலைவர்களும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது” என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இச்சந்திப்பிற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பட்னாவிஸ், ``ஆளுநர் உடனே சட்டமன்றத்தில் அரசிடம் பெரும்பான்மையை நிரூபிக்க கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம். மும்பைக்கு வெளியில் இருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மகா விகாஷ் அகாடியில் தொடர விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

பட்னாவிசுடன் கிரீஷ் மகாஜன், ஆசிஷ் ஷெலார், பிரவின் தாரேகர், சந்திரகாந்த் பாட்டீல், ஸ்ரீகாந்த் பாரதியா ஆகியோரும் சென்று இருந்தனர். இதற்கிடையே சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஆளுநருக்கு மெயில் அனுப்பி இருக்கின்றனர். அதில் உடனே சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் ஆளுநர் விரைவில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் மும்பை வருவேன் என்று தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. தாக்கரே அரசுக்கு 152 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் இப்போது அதில் 40 பேர் அதிருப்தி கோஷ்டியாக மாறிவிட்டனர்.



from Latest News

Post a Comment

0 Comments