பிரதமர் மோடிக்கு எதிராக 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கைத் தொடுப்பதற்குப் பின்னணியிலிருந்து செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார், 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதிட உருவாக்கப்பட்ட சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (Citizens for Justice and Peace) அமைப்பின் செயலாளரான மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் (Teesta Setalvad) ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா-வின் மனித உரிமை பணிக்குழு (The Working Group on Human Rights in India and the UN) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,"இந்திய அரசு மனித உரிமைப் பாதுகாவலர்களைத் திட்டமிட்டு இலக்கு வைப்பது நிறுத்தப்பட வேண்டும். சட்டபூர்வமான மனித உரிமைப் பணிகளைச் செய்யும் பாதுகாவலர்கள் மற்றும் உரிமையியல் சமூக அமைப்புகளுக்கு எதிரான பழிவாங்கல்கள், மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஜனநாயகத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
இந்திய அரசியலமைப்பின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் கடுமையாக மீறும் வகையில், அரசு இயந்திரத்தின் அதிகாரத்தையும், சட்டத்தையும் துஷ்பிரயோகம் செய்வதைப் பிரதிபலிக்கும் வகையில் தீஸ்தா கைதுசெய்யப்பட்டிருக்கிறார்" எனக் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் ( MEA) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்," சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் மற்றும் மேலும் இரு நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்து மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் கருத்தைப் பார்த்தோம். இந்தக் கருத்துக்கள் முற்றிலும் தேவையற்றது மற்றும் இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறை அமைப்பில் தலையிடுவதாக அமைகிறது.
இந்தியாவில் உள்ள அதிகாரிகள் நீதித்துறை செயல்முறைகளின்படி சட்ட மீறல்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இத்தகைய சட்ட நடவடிக்கைகளைத் துன்புறுத்துதல் என முத்திரை குத்துவது தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்துள்ளது.
from Latest News
0 Comments