2022-ம் ஆண்டு துவங்கி அரை வருடங்கள் கடக்க இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த பிரபலங்களில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றே நமது வாழ்க்கையில் அத்தியாவசிய தேவையாக இருந்தது. இந்த மூன்றுடன் தற்போது 4-வதாக செல்ஃபோனும் சேர்ந்துள்ளது என்றால் மிகையாது. வீட்டில் பக்கத்து ரூமில் இருக்கும் நமது உறவுகளை கூப்பிடக் கூட செல்ஃபோன் தான் உதவுகிறது. அந்த அளவுக்கு செல்ஃபோன் பயன்பாடு அதிகரித்து வரும்நிலையில், பெரியவர்களிடம் ஒரு விஷயங்களை கேட்பதெல்லாம் பழைய காலமாகி, பெரியவர்களுக்கே சிறிய குழந்தைகள் கற்றுக் கொடுக்கும் அளவும் இந்த செல்ஃபோன் மூலம் கூகுளில் எதை தட்டினாலும் கிடைக்கிறது. ஒருவர் பேசும், எழுதும் விஷயங்களை கூட கூகுள் பயன்பாடு இல்லாமல் சொல்ல, எழுத முடியாத நிலை உருவாகி விட்டது என்றே சொல்லலாம்.
அதன்படி அரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் ஜூன் மாதம் 23-ம் தேதி அதிகம் தேடப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த 100 பிரபலங்கள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்த பிரபலங்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் தென் கொரியாவின் BTS எனும் பிரபல இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பாடகரான ‘வி’ முதலிடத்திலும், அதே இசைக்குழுவைச் சேர்ந்த ஜங்க்கூக் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
கோலிவுட்டை பொறுத்தவரை தமிழ் நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள விஜய் 22-வது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்துத்தான் மற்ற நடிகர்கள் உள்ளனர். தனுஷ் 61-வது இடத்திலும், சூர்யா 63-வது இடத்திலும் உள்ளனர். ரஜினிகாந்த் 77-வது இடத்தில் உள்ளார். இந்த 100 பேர் பட்டியலில் கமல்ஹாசன், அஜித் ஆகியோர் இடம்பெற்றிருக்கவில்லை. மேலும் நடிகர்களை காட்டிலும் நடிகைகளே அதிகம் இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
காஜல் அகர்வால் 15-வது இடத்திலும், சமந்தா 18-வது இடத்திலும், ராஷ்மிகா மந்தனா 20-வது இடத்திலும், நயன்தாரா 33-வது இடத்திலும், தமன்னா 37-வது இடத்திலும் உள்ளனர். ‘புஷ்பா’ படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான அல்லு அர்ஜூன் விஜயை முந்தி 19-வது இடம் பிடித்துள்ளார். தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜூன் தான் முன்னிலையில் உள்ளார். கடந்த வருடம் வெளியான இந்தப் பட்டியலில் நடிகர் விஜய் 19-வது இடத்தில் இருந்தநிலையில், தற்போது 22-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.
எனினும் இன்னும் 6 மாதங்கள் உள்ளநிலையில், இந்தப் பட்டியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பஞ்சாப்பில் சுட்டு கொலை செய்யப்பட்ட சித்து மூஸ் வாலா 3-வது இடத்திலும், மறைந்த பழம்பெரும் பாடகியும், பாரத ரத்னா விருது வென்றவருமான லதா மங்கேஷ்கர் அதிகம் தேடப்பட்டோர் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி 10-ம் இடத்தில் உள்ளார். தோனி 32வது இடத்திலும், ரோகித் சர்மா 43வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 65வது இடத்திலும் உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments