அசிங்கமான இடங்களைக் கடக்கும்போதும், துர்நாற்றங்களை சுவாசிக்கும்போதும் எனக்கு உடனே எச்சில் துப்பத் தோன்றும். அந்த நேரத்தில் சுரக்கும் எச்சிலை அப்படி துப்புவது சரியானதா? அந்த எச்சிலை விழுங்கினால் கிருமிகள் உடலுக்குள் போய்விடுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
பொதுவாகவே எந்தப் பொது இடத்திலும் வெளியிடத்திலும் எச்சில் துப்புவது சரியானதில்லை. இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதுதான் சிறந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல அசுத்தமான இடங்களைக் கடக்கும்போதும், துர்நாற்றங்களை சுவாசிக்கும்போதும் எச்சில் துப்பத் தோன்றும் உணர்வு என்பது யாரையோ பார்த்து நீங்கள் செய்ய ஆரம்பித்ததாகவோ, யாரோ உங்களுக்குச் சொல்லியதன் விளைவாகவோதான் இருக்கும்.
தொற்றுப் பாதிப்பு அதிகமுள்ள இடங்களைக் கடக்கும்போது வேண்டுமானால் அந்தக் காற்றை சுவாசிப்பதன் மூலம் உங்களுக்குள் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மிகவும் அசுத்தமான இடங்களுக்குச் செல்லும்போது அந்தச் சூழலின் காரணமாக உங்களுக்கு அலர்ஜியோ, இருமல் உள்ளிட்ட தொந்தரவுகளோ வர வாய்ப்புண்டு. ஆனால், அந்தக் காற்றை சுவாசிக்கும்போது சுரக்கும் உமிழ்நீரை விழுங்குவதால் உங்களுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை.
இதுபோன்ற இடங்களைக் கடக்கும்போது ஏற்படும் அருவருப்பு உணர்வைத் தவிர்க்க நீங்கள் மாஸ்க் அணிந்துகொள்ளலாம். தொற்று பயமும் இருக்காது. அசுத்தமான இடங்களைக் கடக்கும்போதே தொற்று வந்துவிடும் என நினைப்பதும் தேவையற்ற பயம்.
தொடர்ந்து நீங்கள் இதுபோன்ற இடங்களைக் கடக்க வேண்டியிருந்தால் போகும்போது மாஸ்க் அணிவதும் போய்விட்டு வந்ததும் கை, கால்களைக் கழுவுவதும்தான் சரியான பழக்கம்.
உங்கள் விஷயத்தில் எச்சில் துப்புவது போன்ற வேறு பழக்கங்கள் இருப்பதாக உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறலாம். வெறும் எச்சில் துப்பும் பழக்கம் மட்டும்தான் இருக்கிறது என்றால் நீங்களே மெள்ள மெள்ள இதை மாற்றிக்கொள்ளலாம்.
from Latest News
0 Comments