வெறும் பழங்களையும் பழ ஜூஸ்களையும் மட்டும் சாப்பிடுவதால் எடை குறையுமா? எந்தெந்த பழங்கள் எடைக்குறைப்புக்கு ஏற்றவை? திரவ உணவுப் பழக்கம் எடைக்குறைப்புக்கு நல்லதா?
-மோகன் (விகடன் இணையதளத்திலிருந்து...)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி
எல்லாவிதமான காய்கறிகள் மற்றும் பழச்சாறு டயட் எடைக்குறைப்புக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பிட்ட காய்கறிகளும் பழங்களும்தான் எடையைக் குறைக்க உதவும் என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை. பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் சாப்பிடும்போது நீங்கள் உங்களுடைய தினசரி கலோரி தேவையைவிட குறைவாகச் சாப்பிடுவீர்கள். அதனால் நிச்சயம் எடை குறையும். ஆனால் அந்த டயட், முறையான பரிந்துரையின் பேரில் பின்பற்றப்பட வேண்டும்.
திரவ உணவுகளையும் பழச்சாறுகளையும் உங்களுடைய தினசரி உணவுப்பட்டியலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நீர்ச்சத்தை அதிகப்படுத்த முடியும். அது உங்களுக்கு கூடுதல் ஆரோக்கியத்தைத் தரும். அந்த வகையில் காய்கறிகளிலிருந்து எடுக்கப்படும் ஜூஸ், பழங்களிலிருந்து எடுக்கப்படும் ஜூஸ், காய்கறி, பழ ஸ்மூத்தி போன்றவற்றை இப்படிச் சேர்த்துக்கொள்ளலாம். இவை தவிர, தானியக் கஞ்சிகள், இளநீர், மூலிகை கலந்த நீர், மூலிகை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்படிச் செய்யும்போது நீங்கள் இழக்கும் எடையானது நிரந்தரமானதல்ல. திரவ உணவு மற்றும் பழ உணவுகள் உங்கள் உடலுக்கு கூடுதல் ஊட்டச்சத்துகளைக் கொடுப்பது உண்மைதான். அதாவது உங்கள் உடலில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகரிக்க உதவும். ஆன்டிஆக்ஸிடன்ட் அளவுகளை அதிகரிக்கும். உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும். உங்கள் உடலை வறண்டுபோகாமல் காப்பதால், சருமம் பளபளக்கும்.
உங்கள் உடலின் எலக்ட்ரோலைட் பேலன்ஸை பராமரிக்கும். இதெல்லாம் நீங்கள் இந்த உணவுப்பழக்கத்தைப் பின்பற்றும்வரைதான். நிறுத்தியதும் மீண்டும் உடல் எடை அதிகரிக்கும். எனவே திரவ உணவு டயட் என்பது எடைக்குறைப்பு முயற்சியில் கூடுதலாகப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாக, அதுவும் உங்கள் டயட்டீஷியனின் பரிந்துரையின் பேரில் பின்பற்றக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர நீங்களாக சுயமாக முயற்சி செய்யக்கூடாது.
நீண்ட காலத்துக்கு திரவ உணவு டயட்டை பின்பற்றுவதால் ஊட்டச்சத்து குறைபாடு, தசை இழப்பு, சருமத்தில் தொய்வு, ஆற்றல் குறைவு, மலச்சிக்கல், தீவிரமான முடி உதிர்வு, அதீத களைப்பு போன்றவை ஏற்படலாம். கடந்த சில வருடங்களில் பலரும் இப்படி எளிதில் எடையைக் குறைக்கும் நோக்கத்தில் சுயமாக ஏதேதோ டயட்டுகளை பின்பற்றி பிரச்னைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் எடையைக் குறைக்க நினைத்தால், முதலில் முழுமையான ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவர் அல்லது டயட்டீஷியனின் உதவியோடுதான் எடைக்குறைப்புத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு எடை அதிகரிப்பதற்கான மூல காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப எடையைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
சில நேரம் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையிலோ, உணவுப்பழக்கத்திலோ மேற்கொள்ளும் சிறிய மாற்றம்கூட உங்கள் எடையில் பெரிய வித்தியாசத்தைக் காட்டும். அந்த வகையில் ஜூஸ் டயட், கூடவே முறையான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவு மூன்றும் கடைப்பிடிக்கப்பட்டால் ஆரோக்கியமான எடை சாத்தியமாகும். ஆனாலும் பழம் மற்றும் காய்கறிகளை ஜூஸாக எடுத்துக்கொள்வதைவிடவும் அப்படியே சாப்பிடுவதுதான் அவற்றிலுள்ள ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலில் சேர உதவும். ஜூஸாக மாற்றும்போது சில ஊட்டச்சத்துகளை இழக்க நேரலாம்.
நீங்கள் செய்ய வேண்டியவையும் தவிர்க்க வேண்டியவையும்!
உணவுக்கு பதில் திரவங்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். அது ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு காரணமாகும்.
திரவ உணவுகளில் அதிகப்படியான உப்போ, சர்க்கரையோ சேர்க்க வேண்டாம்.
அதிக கெட்டியான கஞ்சி, மில்க் ஷேக் போன்றவை எடையை அதிரிக்கச் செய்யலாம்.
நீர்க்க உள்ள பால், மூலிகை டீ, இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ், கிளியர் சூப் போன்றவை எடைக்குறைப்புக்கு உதவும்.
யாருக்கு கூடாது?
நீரிழிவு இருந்தால் காய்கறிகளையும் பழங்களையும் அப்படியே சாப்பிடுங்கள். ஜூஸாக எடுத்துக்கொள்வது ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
சிலருக்கு அதிக நார்ச்சத்து செரிமானவதில் பிரச்னைகள் இருக்கலாம். அவர்கள் இத்தகைய உணவுகளின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பகால நீரிழிவு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உள்ளவர்களும் இந்த டயட்டை பின்பற்றக்கூடாது.
யார் எடுத்துக்கொள்ளலாம்?
சுறுசுறுப்பான குழந்தைகள், ஆரோக்கியமான பெரியவர்கள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்
from Latest News
0 Comments