நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் கைது செய்யப்பட்டார். அவருடன் இவ்வழக்கில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் இவ்வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆர்யன் கான் உட்பட 6 பேருக்கு எதிராக எந்த வித ஆதாரமும் இல்லை என்று கூறி அவர்களது பெயர்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை. ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யவில்லை என்றும் சம்பவ இடத்தில் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் உறுதியாகி இருக்கிறது என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தான் அமெரிக்க கல்லூரியில் படித்த போது தூக்கமின்மை பிரச்னைக்காக கஞ்சா புகைத்ததாக தெரிவித்துள்ளார். தூக்கமின்மை பிரச்னைக்கு கஞ்சா சிறந்த தீர்வு என்று இணையத்தளத்தில் படித்ததாகவும் எனவேதான் அதனை பயன்படுத்தியதாக ஆர்யன் கான் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் வாங்குவது தொடர்பாக வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்ததையும் உறுதி செய்த ஆர்யன் கான், மும்பை பாந்த்ராவில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை தெரியும் என்றும், ஆனால் அவரின் பெயர், எந்த இடத்தில் இருக்கிறார் என்ற உறுதியான தகவல் தனக்கு தெரியாது என்றும் தனது நண்பருக்குத்தான் தெரியும் என்றும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகை அனன்யா பாண்டேயுடன் போதைப்பொருள் தொடர்பாக விவாதித்ததையும் ஆர்யன் கான் ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே போதைப்பழக்கம் ஆர்யன் கானுக்கு உண்டு என்று செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில் அவரது வாக்குமூலம் அமைந்துள்ளது.
from Latest News
0 Comments