Ticker

6/recent/ticker-posts

Ad Code

யாசின் மாலிக்குக்கு வாழ்நாள் சிறை... விமர்சித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு - கண்டித்த இந்தியா!

56 வயதாகும் யாசின் மாலிக் காஷ்மீரைச் சேர்ந்தவர். காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்ற கொள்கையுடன் தொடங்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் லிபரேஷன் ஃப்ரண்ட் (JKLF) அமைப்பின் தலைவர். ஜே.கே.எல்.எஃப் தடை செய்யப்பட்ட பின்பும் அதே கோரிக்கையை யாசின் முன்வைத்துவந்தார். 1990-களில் இந்தியப் பறக்கும்படை அதிகாரிகளைத் தாக்கி மரணமடையச் செய்தது உள்ளிட்ட குற்றங்களில் இவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது, பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருப்பது, சட்டவிரோதமாகப் பணம் திரட்டுவது, சதிச் செயல்களில் ஈடுபடுவது மற்றும் தேசத் துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு 2019-ம் ஆண்டு யாசின் கைதுசெய்யப்பட்டார்.

யாசின் மாலிக்கின் வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது.

யாசின் மாலிக்

வன்முறை:

கடந்த புதன்கிழமை நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் மிகப்பெரிய நகரமான ஸ்ரீநகரில் உள்ள மாலிக்கின் வீட்டில் ஏராளமானோர் கூடினர். சிலர், ``எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும்... கோ பேக் இந்தியா” என்று கோஷமிட்டு, தெருக்களில் ஊர்வலமாகச் சென்றனர். அதையடுத்து தேச விரோத கோஷங்களை எழுப்பியதற்காக 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் வியாழன் அன்று தகவல் தெரிவித்தனர். இது போன்ற செயல்களைத் தூண்டுபவர்கள் மற்றும் ஈடுபடுபவர்களின் மீது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமான PSA-ன் கீழ் பதிவு செய்யப்படுவார்கள், என்றும் காவல்துறை எச்சரித்தது. மேலும், ``ஸ்ரீநகரின் இளைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும், குடும்பத்தையும் பாதிக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம்” என காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

PSA என்பது யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கும் கடுமையான சட்டமாகும்.

காஷ்மீர்

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாகப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி, ``யாசின் மாலிக்கின் குற்றங்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கருத்து தெரிவித்திருப்பது, பயங்கரவாத செயல்களுக்கு மறைமுகமாக அந்த அமைப்பு ஆதரவு அளிப்பது போல அமைகிறது" எனக் கூறினார்.



from Latest News

Post a Comment

0 Comments