நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும் அவரின் நண்பர்களும் கடந்த அக்டோபர் மாதம் மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். மும்பை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றிய சமீர் வான்கடேதான் சொகுசு கப்பலில் ரெய்டு நடத்தி அவர்களை கைது செய்தார். இவ்வழக்கை ஆரம்பத்தில் சமீர் வான்கடே விசாரித்தார். ஆனால் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். மும்பையில் வருவாய் புலனாய்வு பிரிவின் பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் இவ்வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஆர்யன் கான் உட்பட 6 பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று 6 பேரும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் இவ்வழக்கை விசாரித்த சமீர் வான்கடே இதனை சரியாக விசாரிக்காத காரணத்தால்தான் ஆர்யன் கான் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ரெய்டின் போது வீடியோ எடுக்கவில்லை என்றும், கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினர் என்பதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து சமீர் வாங்கடே மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதோடு மகாராஷ்டிரா அரசியல் கட்சிகளும் சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் புலனாய்வு பிரிவில் வரி செலுத்துவோர் சேவை இயக்குநரகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவி மிகவும் முக்கியத்துவம் இல்லாத ஒரு பதவியாக கருதப்படுகிறது. தண்டனை பணியாகவே இந்த புதிய வேலை கருதப்படுகிறது.
சமீர் வான்கடே ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக்கானிடம் மிரட்டி பணம் கேட்டதாக மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார். அதோடு தாழ்த்தப்பட்ட பிரிவில் வேலை பெற சாதிச்சான்றிதழில் முறைகேடு செய்ததாகவும் சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்தும் மத்திய அரசு விசாரித்து வருகிறது.
from Latest News
0 Comments