ஐபிஎல் 2022 தொடரில் முக்கிய விருதுகளை வென்ற வீரர்களின் விவரத்தை பார்க்கலாம்.
ஐபிஎல் 15-வது சீசன் நிறைவு பெற்றுள்ளது. அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உட்பட முக்கிய விருதுகளை வென்ற வீரர்களின் விவரத்தை பார்க்கலாம்.
ஆரஞ்சு கேப்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு கேப் விருதை வென்றுள்ளார். இந்த சீசனில் மொத்தம் 863 ரன்கள் எடுத்துள்ள அவர், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக ரன்கள் சேர்த்த வீரரின் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இதோடு நடப்பு சீசனின் மிகுந்த மதிப்புமிக்க வீரர், அதிக சிக்ஸர் (45), அதிக பவுண்டரி (83), பவர் பிளேயர் ஆஃப் தி சீசன், கேம் சேஞ்சர் ஆஃப் தி சீசன், தொடர் நாயகன் உள்ளிட்ட விருதுகளையும் அவர் கைப்பற்றினார்.
பர்பிள் கேப்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.இந்த சீசனில் அவர் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வளர்ந்து வரும் வீரர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த 22 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றுள்ளார். இந்த சீசனில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அவர், வரவிருக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.
சிறந்த கேட்ச்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் எவின் லூயிஸ், நடப்பு சீசனில் சிறந்த கேட்ச் பிடித்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
சிறந்த பேட்டிங் ஸ்டிரைக்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக், இந்த சீசனில் சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் கொண்ட வீரருக்கான விருதை வென்றுள்ளார். அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 183.33.
அதிவேக பந்துவீச்சு: நடப்பு தொடரில் அதிவேகமாக பந்து வீசிய வீரருக்கான விருதை வென்ற குஜராத் வீரர் லாக்கி ஃபெர்குசன் வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதன்மூலம் அனில் கும்ப்ளே, ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மூன்றாவது கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஹர்திக் பாண்டியா.
இதையும் படிக்கலாம்: 'ராஜஸ்தான் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்' - சஞ்சு சாம்சன் உருக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments