ஐ.பி.எல் போட்டியின் 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியின் ஓப்பனர்களாக டுபிளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினார்.
ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் டுபிளெசிஸ் நிதானமாக ரன்சேர்க்க துவங்கினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் அட்டகாசமான சிக்ஸர் ஒன்றை விளாசி ஆர்சிபி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார் கோலி. ஆனால் பிரஷித் வீசிய அடுத்த ஓவரில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற அந்த நம்பிக்கை தூள் தூளாக நொறுங்கியது.
அடுத்து வந்த ரஜத் படிதார் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி அதிரடியாக விளையாடத் துவங்கினார். பிரஷித் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி மாயாஜாலம் காட்டினார் படிதார். அடுத்து போல்ட் வீசிய 5வது ஓவரில் டுபிளெசிஸ் 2 பவுண்டரிகளை விளாச ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது.
பிரஷித் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி மீண்டும் அதகளம் செய்தார் படிதார். அதே ஓவரில் படிதார் கொடுத்த ஒரு கேட்சை ரியான் பராக் தவறவிட்டார். பவர்பிளே முடிவில் 46 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது ஆர்சிபி. அதன்பின் டுபிளெசிஸ், படிதார் இருவரும் நிதானமாக விளையாட ஸ்கோர் மந்தமாக உயரத் துவங்கியது.
சஹால் வீசிய 9வது ஓவரில் சிக்ஸர் விளாசி அதிரடிக்கு திரும்பினார் படிதார். ஆனால் மறுமுனையில் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த டுபிளெசிஸ் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஒபெட் மெக்காய் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அஸ்வின் வீசிய பந்தில் சிக்ஸர் விளாசி அதிரடியாக விளையாடத் துவங்கினார். சஹால் ஓவரிலும் மேக்ஸ்வெல் தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி நம்பிக்கை அளித்தார்.
ஆனால் போல்டு வீசிய ஓவரில் மேக்ஸ்வெல் 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். மறுமுனையில் படிதார் சிக்ஸர் விளாசியபடி 40 பந்துகளில் அரைசதம் விளாசினார். ஆனால் அவரும் அஸ்வின் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசிவிட்டு, அடுத்த பந்திலேயே பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து டெத் ஓவர்களில் கூட்டணி சேர்ந்தனர் லோம்ரோர், தினேஷ் கார்த்திக். நிதானமாக விளையாடத் துவங்கிய லோம்ரோர் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, தினேஷ் கார்த்திக் பிரஷித் ஓவரில் 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ஹசரங்காவும் பிரஷித் பந்துவீச்சில் கோல்டன் டக் அவுட்டாக, ஆர்சிபி கடும் நெருக்கடிக்கு ஆளானது.
அடுத்து வந்த சபாஷ் அகமது தன்பங்குக்கு ஒரு சிக்ஸர் விளாச, ஹர்ஷல் படேல் மெக்காய் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி நடையைக் கட்டினார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது ஆர்சிபி அணி. அபாரமாக பந்துவீசிய பிரஷித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினர். ஒரு கட்டத்தில் 200 ரன்களை நோக்கி நகர்ந்த ஆர்சிபி அணியை 160 ரன்களுக்குள் இருவரும் முடக்கினர்.
தற்போது 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments