கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு, வீடுகள் மற்றும் ஆலயங்களில் திருட்டு என கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால் தக்கலை சுற்றுவட்டார பகுதி மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று தக்கலை அருகே உள்ள ஆர்.சி தெருவில் சந்தேகத்துக்கு இடமாக ஒரு ஜோடி அங்கும், இங்கும் சென்றுள்ளது. சிறிது நேரம் அவர்களை கவனித்த தெருவாசிகள் தங்களுக்குள் பேசி ஒன்று திரண்டு அந்த ஜோடியை பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர்கள், ``நாங்கள் காதலர்கள்' என பதில் கூறியுள்ளனர். அவர்களது பதிலை ஏற்றுக்கொள்ளாத தெரு மக்கள் அவர்களை சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவர்களை சர்ச் கொடிமரத்தில் கட்டி வைத்துள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்ததால் அந்த பகுதிக்கு போலீஸார் சென்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் கொடி மரத்தடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த ஜோடியை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாபு மோன், நூர்ஜகான் எனத் தெரியவந்தது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், "ஷாபு மோன்(42) கருங்கல் அருகே கப்பியறை பகுதியைச் சேர்ந்தவர். நூர் ஜகான்(35) அழகியபாண்டிபுரத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் ஐந்தாறு ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து காதல் ஜோடி என்ற போர்வையில் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் தேடப்பட்டுவரும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர். என்ன திட்டத்துடன் சுற்றித்திரிந்தனர் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
from Latest News
0 Comments