கேரள மாநிலத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரியான திவ்யா அய்யர், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த சபரிநாதன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் ஆலப்புழா கலெக்டரும், கேரள சுகாதாரத்துறை இயக்குநரும் நேற்று திருமணம் செய்துகொண்டது கவனம் ஈர்த்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட கலெக்டர், டாக்டர் ரேணு ராஜ். கேரளா சுகாதாரத்துறை இணை இயக்குநர், டாக்டர் ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ். இவர்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சோட்டானிக்கரா தேவி கோயில் அருகே உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ரேணு ராஜ்ஜும், ஸ்ரீராம் வெங்கட்ராமனும் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றுவிட்டு பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று பணியில் சேர்ந்தவர்கள்
ஆலப்புழா கலெக்டராக இருக்கும் ரேணு ராஜ் கோட்டயத்தைச் சேர்ந்தவர். 2014-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் இரண்டாம் ரேங்க்குடன் வெற்றிபெற்றார். முதலில் திருச்சூர் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். ரேணு ராஜ், தன்னுடன் படித்த மருத்துவர் ஒருவரை திருமணம் செய்தார். பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர். ஸ்ரீராம் வெங்கட்ராமனுக்கு இது முதல் திருமணம்.
ஸ்ரீராம் வெங்கட்ராமன் 2013-ம் ஆண்டு இந்திய அளவில் இரண்டாம் ரேங்க் எடுத்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றார். பிறகு தேவிகுளம் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அப்போது மூணாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டதால் கேரள மக்களிடம் வரவேற்பு பெற்றிருந்தார். 2019-ம் ஆண்டு ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஓட்டிய கார் மோதிய விபத்தில் பத்திரிகையாளர் பஷீர் மரணமடைந்தார். அந்த விபத்து ஸ்ரீராம் வெங்கட்ராமனின் தவற்றால் நடந்தது என்றும், அவரது காரில் ஒரு பெண் இருந்த விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பியது.
from Latest News
0 Comments