உறவுகளுக்குள் என்னதான் பிரச்னை ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் போனாலும், ஆபத்து என்று வரும்போது கை கொடுக்க வந்து நிற்பார்கள். தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்தில் சிறுவன் ஒருவன் சிக்கி கொள்ள, அருகில் இருந்த உறவினரை பார்த்து, அலறியுள்ளான். ஒரு அடி இடப்பிரச்னைக்காக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அக்குடும்பத்தினருடன் பேசாமல் இருந்த சிறுவனின் மாமா, சிறுவனை காப்பாற்ற சென்றுள்ளார். இதில் இருவருமே உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஒரே ஊரில் ஒரே நேரத்தில் 11 பேர் இறந்ததால் அந்த கிராமம் முழுவதும் இப்போதும் அழுகுரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
களிமேடு கீழத் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(42). விவசாயியான இவருக்கு திருமணமாகி, ராஜ்குமார்(14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரின் சொந்த தாய் மாமன் சாமிநாதன் (56). இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். சாமிநாதனுக்கும், முருகேசனுக்கும் தங்கள் இரு வீட்டுக்கு நடுவே உள்ள பாதை தொடர்பாக இடப்பிரச்னை இருந்துள்ளது.
ஒரு அடி அளவிலான இடம் இரு குடும்பத்துக்குள்ளும் பேச்சு வார்த்தையே இல்லாத அளவிற்கு கொண்டு சென்று விட்டது. மேலும் அடிக்கடி இடம் தொடர்பாக இரண்டு குடும்பமும் சண்டை போட்டு வந்துள்ளனர். கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் இந்த பிரச்னை நீடித்து வந்துள்ளது. இந்த பிரச்னை காரண்மாக, சிறுவன் ராஜ்குமார் முதற்கொண்டு இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் பேசிக்கொள்வதில்லையாம்.
இந்நிலையில் களிமேட்டில் நடைபெற்ற தேர் திருவிழாவில் சிறுவன் ராஜ்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து தேரை இழுத்து சென்றுள்ளான். கொஞ்ச தூரத்தில் மாமா சாமிநாதனும் சென்றுள்ளார். இதனிடையே மின்சாரம் தாக்கிய நிலையில் பலர் தூக்கி வீசப்பட்டனர். கரண்ட் ஷாக்கை தாங்க முடியாத ராஜ்குமாரும் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அப்போது, சாமிநாதனை பார்த்த சிறுவன், மாமா என அழைத்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ``சாமிநாதனும் பதறியபடி சிறுவனை காப்பாற்றுவதற்கு ஓடோடி சென்றுள்ளார். தேரை வரவேற்க ரோட்டுல தண்ணீர் ஊத்தியிருந்ததால மின்சாரம் ரோட்டுலயும் பாய்ந்துள்ளது. ராஜ்குமாரை தூக்க சென்ற சாமிநாதன் ரோட்டுல மின்சாரம் பாய்ந்த இடத்தில் கால் வச்சதுமே தூக்கி வீசப்பட்டார்.
இதில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். சாமிநாதன் விபத்து நடந்த இடத்தில் இல்லையென்றாலும், ராஜ்குமாரை காப்பாற்ற சென்றபோது அவர் உயிரழந்ததை குறித்து சோகமாக பேசிக்கொள்கிறார்கள்,
from Latest News
0 Comments