500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவரும் குமரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள இந்தப் பள்ளிக்கு பொதுமக்கள் வழங்கியுள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் பள்ளி அமைத்து தரவேண்டும் என்று மாணவ-மாணவிகளும் பெற்றோரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது குமரமங்கலம் உயர்நிலைப்பள்ளி கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக அரசுக்கு கட்டவேண்டிய ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் பள்ளி கட்டடம் கட்டுவதற்காக இரண்டு ஏக்கர் நிலம் ஆகியவற்றை பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் பெயரில் எழுதிக் கொடுக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை பள்ளி கட்டடம் கட்டப்படாமல் தொடக்கப்பள்ளி கட்டடத்திலேயே இயங்கி வருகிறது.
மொத்தமாக எட்டு வகுப்பறைகளில் 9 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கின்றனர். இங்கு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி கல்வி நடைபெற்று வருகிறது. வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் ஆங்கில வழிக்கல்வி மற்றும் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே வகுப்பறையில் அமர வைத்து போதிக்கப்படுகின்றனர். மேலும் போதிய அளவிலான இடவசதி இல்லாத காரணத்தால் பல மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து பயின்று வருகின்றனர். இங்கு தலைமையாசிரியர் அறை, கணினி அறை, நூலக அறை என தனித்தனியாக இல்லாமல் அனைத்து அறைகளும் வகுப்புகள் எடுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கவும் உணவருந்தவும் தனி அறைகள் ஏதும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருவதால் இடைவேளையின்போது இயற்கை உபாதையை கழிக்க ஒரேநேரத்தில் பலரும் செல்வதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. சுகாதாரம் சீர்கேடு அடைந்து வருகிறது என்று மாணவ மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் போதிய இடம் இல்லாததால் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு நடைபெற்று வருகிறது. திருமண காலங்களில் வாடகைக்கு திருமண மண்டபம் விடப்படும்போது மண்டபத்தில் கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகள் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் படிக்கும் இடத்திலேயே அமர வைக்கப்படுகின்றனர். இதனால் பாடங்களை கவனிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக மாணவ மாணவிகள் கூறுகின்றனர்.
மேலும் விளையாடுவதற்கு முறையான மைதான வசதி இல்லை என்றும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் வாங்கி கொடுக்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டித் தரவேண்டும் என்றும், தற்போதைய அவசர தேவைக்காக இந்தப் பள்ளிக்கூடத்தில் இரண்டு கூடுதல் கட்டடங்கள் கட்டித் தரவேண்டும் என்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரமங்கலம் என்ற ஊர் மிகவும் பிரசித்தி பெற்ற ஊர் ஆகும். இதுதான் முன்னாள் 1926 முதல் 1930 களில் மதராசப் பட்டினத்தின் முதல்வரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பராயன் மற்றும் அவர்களது வழித்தோன்றல்கள் மோகன் குமாரமங்கலம் ரங்கராஜன் குமரமங்கலம் என கூறப்படும் ஜமீன் குடும்பத்தினரின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments