பாலியல் வன்முறை செய்த 10 லட்சத்துக்கும் அதிகமான குற்றவாளிகளின் விவரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாலியல் குற்றவாளிகளின் விவரங்கள் சட்ட அமலாக்கத் துறையினரால் தேவையான நேரத்தில் புதிய விசாரணையின்போது பயன்படுத்திக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21ம் ஆண்டுக்கான மத்திய அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையின்படி, பாலியல் குற்றவாளிகள் மீதான தேசிய தரவுத்தளத்தில் (NDSO - National Database on Sexual Offenders) நாட்டில் 10.69 லட்சத்துக்கும் அதிகமான பாலியல் குற்றவாளிகளின் தரவுகள் உள்ளன.
பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பெண்களைத் துன்புறுத்துதல், மற்றும் சிறார் வதை குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளிகளின் விவரங்கள் இந்தத் தரவுத்தளத்தில் கிடைக்கின்றன. இந்த தரவுகளில் குற்றவாளிகளின் பெயர், முகவரி, புகைப்படம், அடையாள அட்டை மற்றும் கைரேகை விவரங்கள் போன்றவையும் உள்ளன. நாடு முழுவதும் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சட்டத் துறையினருக்கு, இந்தத் தரவுகள் மூலம் குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணையை துரிதப்படுத்தவும், தவறிழைப்பின் உடனடியாக குற்றவாளிகளைப் பிடிக்கவும் உதவ இயலும்.
கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் NDSO ஆரம்பிக்கப்பட்டது. இன்டர் ஆப்பரபிள் கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம் (ICJS - Inter-operable Criminal Justice System) தளத்தை மேம்படுத்துவதன் மூலம், அறியப்பட்ட பாலியல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தரவுத்தளத்தில் குற்றவாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தளம் 24 மணிநேரமும் இயங்கக்கூடியது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் டிரினிடாட் போன்ற நாடுகளில் இத்தகைய தரவுத்தளங்கள் உள்ளன. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் இதுபோன்ற தரவுத்தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News
0 Comments