தினமும் காலை உணவுக்கு ஓட்ஸ் சாப்பிடலாமா? ஓட்ஸ் சாப்பிட்டால் எடை குறையுமா? பால் சேர்த்து சாப்பிட்டால் எடை கூடும் என்றும், மோர் சேர்த்து எடுத்துக்கொண்டால் எடை குறையும் என்றும் சொல்வது உண்மையா? ஓட்ஸை வேறு எந்த வடிவத்தில் எடுத்துக்கொள்வது சரியானது?
- ஷியாம் சுந்தர் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்.
``தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே சிறந்தது. சிலருக்கு ஓட்ஸ் வயிற்று உப்புசத்தை, வாயுத் தொல்லையை மற்றும் நீர்கோப்பதை ஏற்படுத்தலாம். வேலைக்குச் செல்வோருக்கும், காலை உணவைத் தவிர்ப்போருக்கும் ஓட்ஸ் சிறந்த மாற்று உணவு என்பதில் சந்தேகமில்லை. ஓட்ஸை உப்புமாவாக, கிச்சடியாக, தோசையாக, இட்லியாக.... இப்படி பல வகைகளில் எடுத்துக்கொள்ளலாம்.
ஓட்ஸை மட்டும் தனியே எடுத்துக்கொள்வதற்கு பதில் அத்துடன் சிறுதானிய வகைகள், பண்டையகால அரிசி வகைகள் போன்றவற்றையும் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
ஓட்ஸுடன் பால் கலந்து குடிப்பது நிச்சயம் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு அந்த காம்பினேஷன் சரியானதல்ல. ஆனால் குழந்தைகளுக்கு அது மிகச் சிறந்த உணவு. அதிலுள்ள கால்சியம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
பால் ஒவ்வாமை பிரச்னை இருப்போருக்கும் பால் கலந்த உணவுகள் சரியானவையல்ல. அவர்கள் பாலுக்கு பதில் நட்ஸிலிருந்து பெறப்பட்ட பாலை பயன்படுத்தலாம். ஓட்ஸ் என்றில்லை, மோர் சேர்த்த எந்தக் கஞ்சியும் சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News
0 Comments