இலங்கையில் பெட்ரோல், டீசல் தொடங்கி பேப்பர் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கடும் விலை உயர்வைச் சந்தித்திருக்கின்றன. சாமானிய மக்களுக்கு இலங்கையில் வாழ தகுதியற்ற சூழல் நிலவுகிறது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளும் மக்களும் வீதிகளில் இறங்கி அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நடந்திருக்கின்றனர். 2019-ல் நடந்த பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வீழ்த்தி கோத்தப்பய ராஜபக்சே அதிபராக பதவியேற்றார். 2020-ம் ஆண்டிலிருந்தே பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க ஆரம்பித்தது இலங்கை. தற்போது திவலாகும் நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த பொருளாதார சரிவுக்கு ராஜபக்சே அரசின் அதிரடி திட்ட அமலாக்கங்கள் காரணமா... இதன் ஆரம்பப் புள்ளி என்ன?
இது குறித்து, இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் செந்தில் தொண்டமானிடம் பேசினோம். ``2019 கோவிட் பெருந்தொற்று தாக்கத்தால், இந்த பொருளாதார வீழ்ச்சி மோசமடைய தொடங்கியது. இலங்கையைப் பொறுத்தமட்டில் பொருளாதார ரீதியாக, 20% மட்டுமே தன்னிறைவு அடையும் நாடு. மீதமுள்ள 80 சதவிகிதத்துக்கு பிற நாடுகளைச் சார்ந்தே இலங்கையின் பொருளாதாரம் உள்ளது. குறிப்பாக இலங்கையின் வருவாய்க்கு வலு சேர்ப்பது இரண்டு விஷயங்கள்தாம். ஒன்று தேயிலை ஏற்றுமதி. மற்றொன்று, சுற்றுலா வருவாய். இவ்விரண்டுமே கோவிட் பெருந்தோற்றல் பாதிக்கப்பட்டன. அதன் விளைவாக பொருளாதாரம் சரிவைக் கண்டது. தன்னிறைவைப் பெரும் முனைப்போடு தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில், மீதமுள்ள மூன்று வருட ஆட்சிக் காலத்தில் கண்டிப்பாக வீழ்ந்த பொருளாதாரத்தை 50% மீட்க முயல்வோம்" என்றார். மேலும், சுயலாப நோக்கமின்றி உதவ விரைந்த இந்தியாவுக்கு இலங்கை அரசு சார்பில் நன்றியும் தெரிவித்தார் செந்தில் தொண்டமான்.
`கோவிட் பெருந்தொற்று தான் இந்தப் பொருளாதார சரிவுக்கு காரணமா?' என்ற கேள்வியை இலங்கை இதழியலாளர் நிலாந்தனிடம் முன்வைத்தோம். ``இது தொடர்பாக மூன்று தரப்பு விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, அரசாங்கம் கோவிட் பெருந்தொற்றை காரணமாகக் கூறுகிறது. மறுதரப்பு அரசாங்கத்தின் கூற்றை மறுத்து, கோவிட் பரவலுக்கு முன்பாகவே இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2019-ம் ஆண்டு, வரிக்குறைப்பு செய்ததால் வந்த விளைவுதான் இது என்கிறது. மூன்றாவது தரப்பானது, 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பிலிருந்து பொருளாதாரம் சரிய தொடங்கியதாகக் கூறுகிறது. இப்படியாக மூன்று கோணங்களில் இந்தப் பிரச்சனை அணுகப்படுகிறது. இவைதவிர தமிழ் மக்கள் தரப்பில், தமிழீழ போர் காலம் தொடங்கி இலங்கையின் பொருளாதாரமானது சரியத்தொடங்கியது என்ற கருத்துகளும் சொல்லப்படுகிறது. போர் நிலவும் எந்த நாடும் முதலீட்டாளர்களை ஈர்க்காது. அது மட்டுமில்லாமல் இப்போது அரசாட்சியிலிருக்கும் கோத்தப்பய ராஜபக்சேவுடைய அரசானது ஈழப் போர் வெற்றியை முன்னிறுத்தியே தேர்தலை வென்றுள்ளது. மூன்றில் இரண்டு தனி சிங்களப் பெரும்பான்மை பெற்ற அரசு என்று மார்தட்டிக்கொள்கிறது. ஆக போர்தான் இதன் தொடக்கப்புள்ளி. அதை ஏற்கமறுக்கிறது ஆளும்கட்சி"
மேலும் இலங்கையின் விவசாயம் பற்றிய பேசிய நிலாந்தன், ``கோத்தப்பய ராஜபக்சே பதவியேற்றவுடன், செயற்கை உரத்தை முற்றிலுமாக தவிர்த்து இயற்கை உரம் கொண்டு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மட்டும் தான் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டம் விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்தை வெகுவாக பாதித்தது'' என்றவரிடம், `இந்த நெருக்கடியில் ஈழத்தமிழர்கள் நிலை என்ன?' என்று கேட்டோம்
அதற்கு, ``ஏற்கனவே தமிழர்கள் சாவினால் சப்பித் துப்பப்பட்டவர்கள். போர்ச் சூழலில் தமிழ் மக்கள் சந்தித்த இன்னல்களை ஒப்பிடும் போது இந்த நிலை எல்லாம் ஒன்றுமே இல்லை. சிங்களர்கள் பலர் பட்டினியால் மாண்டு போகிறார்கள் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் அந்த நிலை இன்னும் வரவில்லை. ஆம், இங்கும் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் இதைக் காட்டிலும் அதிக இன்னல்களை சந்தித்ததால் இந்த நிலையை தமிழர்கள் கடப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று பதிலளித்தார்.
from Latest News
0 Comments