அசாம் - மேகாலயா இடையே 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண இரு மாநில அரசுகளும் ஒப்புக் கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
மேகாலயாவுக்கும், அண்டை மாநிலமான அசாமிற்கும் இடையே கடந்த 1972ஆம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு மாநில எல்லையோரம் அமைந்துள்ள 36 கிராமங்களை மேகாலயா அரசு உரிமை கோரியது. எனினும் அதற்கு அசாம் மாநில அரசு ஏற்க மறுத்தது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரு மாநில அமைச்சர்கள் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டு எல்லையை வரையறுக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்கான வரைவு தீர்மானம் ஒன்றை இரு மாநில முதலமைச்சர்களும் கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்தனர். அதன் மீது ஆய்வு மற்றும் பரிசீலனை நடைபெற்றது.
இந்த நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. அதில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மேகாலயா முதல்வர் கான்ட்ராட் சங்மா இருவரும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிரச்னைக்கு தீர்வு காண ஒப்புதல் தெரிவித்து, அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அதன்படி, இரு மாநிலங்களுக்கு இடையே 884 புள்ளி 9 கிலோ மீட்டர் தொலைவிலான எல்லையில் இருக்கும் 12 இடங்களில், 6 பகுதிகளில் பிரச்னைக்கு தீர்வு காண வழி ஏற்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் உள்ள 36.79 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியில் அசாமிற்கு 18.51 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியும், மேகாலயாவுக்கு 18.28 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியும் பிரித்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த உடன்பாடு மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் 70 சதவிகித எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லை விவகாரத்தில் இந்த வரலாற்று ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments