விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நேரு வீதியில் உள்ள பழைய நீதிமன்ற வளாகம் அருகே செயல்பட்டு வருகிறது இணை சார்பதிவாளர் அலுவலகம். திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தன்னுடைய தந்தை தேவதாஸ் பெயரில் உள்ள இடத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்வதற்காக இந்த அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது, பொறுப்பு சார் பதிவாளர் சங்கரலிங்கம், பத்திரப்பதிவு செய்யவதற்கு 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, நேற்றைய தினம் (29.03.2022) திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்றுள்ளார் பிரகாஷ்.
பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சமாக கேட்கப்பட்டதாக கூறப்படும் 50,000 ரூபாய் பணத்தை பொறுப்பு சார் பதிவாளர் சங்கரலிங்கத்திடம், பிரகாஷ் கொடுத்த போது, பத்திர எழுத்தர் சரவணனிடம் கொடுக்கும்படி கூறினாராம். அதன்படி, சரவணன் மூலமாக பொறுப்பு சார் பதிவாளருக்கு அந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பொறுப்பு சார்பதிவாளர் சங்கரலிங்கத்தையும், உடந்தையாக இருந்த பத்திர எழுத்தர் சரவணனையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணை, மாலை நேரம் வரை நீடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அவ்விருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். இந்த அதிரடி நடவடிக்கையால், நேற்றைய தினம் அந்த அலுவலகத்தில் நடைபெற இருந்த பத்திரப்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களிலேயே பணி ஓய்வு பெற உள்ளதாக கூறப்படும் சங்கரலிங்கம், லஞ்சம் பெற்று, லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
from Latest News
0 Comments