உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தலைநகர் கீவில் இருந்தபடி களநிலவரத்தை வீடியோ மூலமாக விவரித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், உக்ரேனிய மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை பல லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.
மேலும், உக்ரைனில் சிக்கியிருக்கும் 20,000 இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை முயன்று வருகிறது. இந்த நிலையில், மருத்துவம் பயில உக்ரைன் நாடு சென்ற ஹரியானாவைச் சேர்ந்த மாணவி இந்தியா திரும்ப மறுத்துள்ளார்.
இது குறித்து வெளியான தகவலில், மருத்துவம் பயிலச் சென்ற மாணவிக்கு, கல்லூரியில் தங்கும் விடுதி கிடைக்கவில்லை. அதனால் வெளியே தனியாக வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். தற்போது போர் சூழல் காரணமாக அந்த வீட்டின் உரிமையாளர் யுத்தகளத்துக்குச் சென்றுவிட்டார்.
அதனால், அவரின் மனைவியும், மூன்று குழந்தைகளும் பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் அந்த குழந்தைகளை விட்டு வர மனமில்லை. எனவே யுத்தம் முடிந்த பின் இந்தியா வருவதாகத் தெரிவித்துள்ளார். அந்த மாணவியின் தாய் எவ்வளவு முயன்றும் அவர் வர மறுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அந்த மாணவியின் குடும்ப நண்பர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
from Latest News
0 Comments