நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அஜித் நடிப்பில், திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, ரசிகர்கள் அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்து வருகின்றனர்.
மேலும், இந்தப் படத்தில் பைக் சேஸிங், சண்டைக் காட்சிகள் மிகவும் அற்புதமாக எடுக்கப்பட்டிருப்பாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதுவரை வெளியான அஜித் படங்களில் இதுவே அதிக வசூல் செய்தப் படமாகவும் கூறப்படுகிறது. மேலும் ‘அண்ணாத்த’ (ரூ.35 கோடி) மற்றும் ‘மாஸ்டர்’ (ரூ. 34.80 கோடி) ஆகிய படங்களின் வசூல் சாதனையையும் ‘வலிமை’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் ‘வலிமை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூலில் சாதனைப் புரிந்து வந்தாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள், விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் 'வலிமை' படத்திலிருந்து 12.5 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட புதிய வெர்ஷன் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதேபோல், இந்தியில் 15 நிமிட காட்சியை நீக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நாங்க வேற மாறி பாடலையும் நீக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடைசியாக வெளியான ‘புஷ்பா’ படத்திலும், இதேபோன்று விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments