நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் 'லவ் பேர்ட்ஸ்' பறவைகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சியிலும் ஆர்வமாகச் செயல்பட்டுவரும் அவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் களக்காடு நகராட்சி 2-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
விஜய்ரூபன் தனது உறவுக்காரப் பெண் ஒருவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். அவர்களது காதல் வெளியே தெரிந்ததும் குடும்பத்தில் எதிர்ப்பு ஏற்பட்டதால் பெண்ணின் தந்தையை நேரில் சந்தித்த விஜய்ரூபன், அவரின் மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் விஜய்ரூபனுக்கு நிரந்தர வருமானத்துக்குரிய தொழில் இல்லாததால் அவருக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டார்.
விஜயரூபன் தொடர்ந்து தன் மகளின் பின்னால் சுற்றுவதை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவுசெய்து, திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். காதல் மற்றும் தேர்தல் தோல்வி ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தோல்வியால் விஜய்ரூபன் ஆத்திரம் அடைந்துள்ளார்.
காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நடக்க இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அவர், தாங்கள் காதலித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் அந்தப் பெண் கொடுத்த கவிதை நடையிலான கடிதத்தின் நகல் ஆகியவற்றை போஸ்டராக அச்சடித்து களக்காடு நகரம் முழுவதும் ஒட்டியுள்ளார்.
காதலித்த பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் வீட்டைச் சுற்றிலும் அதிகமான எண்ணிக்கையில் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார். அதைப் பார்த்த மணமகன் வீட்டினர் அதிர்ச்சியடைந்து பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் களக்காடு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விஜய்ரூபனை தேடியுள்ளார். அதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தால் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
from Latest News
0 Comments