ஒருபோதும் ஒருதலைப்பட்சம் கூடாது
1950-ல் இந்தியா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்ட அன்று ராஷ்டிரபதி பவனில் அவர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது. "இந்தியா ஒரு போதும் தனது எந்தக் கருத்தையும் நம்பிக்கையையும் பிறருக்குப் பரிந்துரைப்பதும் இல்லை. கட்டாயப்படுத்துவதும் இல்லை. தெய்வ நம்பிக்கை உள்ளவர், தெய்வ நம்பிக்கை இல்லாதவர், இறைவனைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லாதவர் ஆகிய அனைவருக்கும் இந்த நாட்டில் இடம் உண்டு என்பதுதான் இந்தியாவின் அணுகுமுறை".
உயரப் பறக்கும் அதே நேரம் மண்ணில் கால் பதிக்க வேண்டும்
என்னதான் வாழ்க்கையில் பல உயரங்களை அடைந்தாலும் நம் மண்ணின் பெருமையை மறக்கக்கூடாது. மக்களை விலக்கி வைக்கக்கூடாது. ராஷ்டிரபதி பவனில் ராஜேந்திர பிரசாத்துக்கு முன்பே பிரிட்டிஷ் அதிகாரிகள் வசித்துள்ளனர். ஆனால் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் ஆனவுடன், "ஆண்டுக்கு ஒருமுறை ராஷ்டிரபதி பவன் வளாகத்திலுள்ள பிரமாண்டமான முகலாயத் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படும்" என்றார்.
எளிமையே பெருமை
சிறப்புகளை அடைய அடைய தலைக்கனம் அதிகமாக வாய்ப்பு உண்டு. அப்படி நேராமல் பார்த்துக் கொண்டால்தான் அந்த சிறப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். டாக்டர் ராதாகிருஷ்ணனின் கல்விச் சிறப்புகள் நாடறிந்தவை. எனினும் அவருக்கு முன்பாகக் குடியரசுத் தலைவராக விளங்கிய ராஜேந்திர பிரசாத்தும் கல்வியில் சிறப்புப் பெற்றவர்தான். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியவர் (அப்போதெல்லாம் பல்கலைக்கழகத்தில் ஓரிருவருக்குதான் முதல் வகுப்புத் தேர்ச்சி வழங்கப்படும்). ஒரு தேர்வில் ராஜேந்திர பிரசாதின் விடைத்தாளில், "தேர்வாளரை விட இந்த மாணவன் மேம்பட்ட அறிவுள்ளவனாக இருக்கிறான்" என்று எழுதியிருந்தார் ஒரு தேர்வாளர்.
பிறருக்கு உபதேசம் செய்வதை நாமும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் ராஜேந்திர பிரசாத். காந்தியின் சீடர். ஒரு முறை ‘மேற்கத்தியக் கல்வி நிறுவனங்களை நம் வாழ்வில் இருந்து ஒதுக்க வேண்டும்’ என்று காந்தி உரை நிகழ்த்த, அதைக்கேட்ட ராஜேந்திரபிரசாத் தன் மகனை அவன் படித்துக் கொண்டிருந்த மேற்கத்தியக் கல்விக் கூடத்திலிருந்து வெளியேறச் செய்து அவனை வித்யா பீடத்தில் சேர்த்தார். இது மரபு சார்ந்த இந்திய வழிக் கல்விக்கூடம்.
சுய பரிசோதனை ஞானத்தை ஊட்டும்
கால ஓட்டத்தில் வேகமான உலகில் நாம் அடுத்து அடுத்து என்று காரியங்களில் ஈடுபடுகிறோம். நடு நடுவே கொஞ்சம் நின்று நம்மை உணர்ந்து நிலைநிறுத்திக் கொண்டால் அது தெளிவான பாதையைக் காட்டும். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற காலகட்டத்தில் ராஜேந்திர பிரசாதின் உடல்நலம் கெட்டது. அவர் நினைத்திருந்தால் டெல்லியிலேயே தங்கியிருந்து உடல் நலத்துக்கான பலவித நவீன சிகிச்சைகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் பீகாரில் உள்ள தன்னுடைய எளிய வீட்டுக்குச் சென்றுவிட்டார். "நான் எங்கிருந்து இங்கு வந்தேனோ அங்கேயே திரும்புவதுதான் நல்லது" என்று இதைப் பற்றி குறிப்பிட்டார்.
from Latest News
0 Comments