கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள தன் கணவருக்கு பரோல் வழங்கக்கோரி அவரின் மனைவி சென்னை, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது கருத்தரிப்பு சிகிச்சைக்காக அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில், மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ``குற்றம் சாட்டப்பட்ட நபர், சாமானிய மக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை அனுபவிக்க முடியாது. குற்றவாளிகளை அப்படி அனுமதித்தால் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் குடிமக்களுக்கும், சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்டவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்" என்று கூறி தாம்பத்திய உறவுக்காக கைதிக்கு பரோல் வழங்கக் கோரிய மனுவுக்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர்.
Also Read: `நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய கருத்துகள் நீக்கம்!' - உயர் நீதிமன்றம் உத்தரவு
சிறைக் கைதிகளுக்கு இதுபோன்ற விஷயங்களுக்கு அனுமதி மறுப்பது குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தியிடம் பேசினோம்.
``பல நாடுகளில் குற்றவாளிகளின் தனிப்பட்ட உரிமைகள் சிலவற்றுக்கு அனுமதி வழங்குவதுபோல் அவர்களின் தாம்பத்திய உறவுகளுக்கும் அனுமதி வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்கிற நிலைப்பாடு இருக்கிறது. வேறு சில நாடுகளில் இந்த உரிமைகள் மறுக்கப்பட்டுதான் இருக்கின்றன. ஒரு குற்றத்தின் வீரியம், அதற்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையின் நீட்டிப்புக் காலம், சிறையில் அவர்களின் வாழ்க்கைமுறை மற்றும் நன்னடத்தை போன்ற விஷயங்களை அலசி ஆராய்ந்தும் அதைத் தொடர்ந்து அவர்கள் செய்த குற்றங்களின் (தேசத்துக்கு எதிரான குற்றம், கொடூரமான குற்றம், பாலியல் வன்புணர்வு-வன்கொடுமை, கொலை) வீரியத்தைக் கொண்டும் இந்தச் சலுகைகள் மறுக்கப்படலாம்.
என்னுடைய தனிப்பட்ட பார்வையில், குற்றவாளியாக சிறையில் இருக்கக்கூடிய நபருக்கு அவரது நன்னடத்தையின் அடிப்படையில் இதுபோன்ற உரிமைகளைத் தருவதால் அவர் விடுதலை பெற்று வெளியே வந்ததும் சமூகத்தில் நல்ல மனிதராக மனம் திருந்தி வாழக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. சிறையில் கல்வி என்பது மறுக்கப்படாத ஒன்று. தொழில்கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சிறையிலுள்ள ஒரு கைதி திருந்தி நல்ல மனிதராக இந்த உலகில் உலவுவதற்கு அனைத்து வழிகளும் செய்யப்படுகின்றன.
அதேபோல் ஒரு மனிதன் தன் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தில் சிறைக்குச் சென்று மீண்டும் வெளி உலகுக்கு வரும்போது அவருடைய குழந்தைப்பேறு கனவு முற்றுப்பெறும் சூழ்நிலை இருந்தால் அதனைப் பூர்த்தி செய்ய தற்போதைய சட்டத்தில் அனுமதி இல்லை. ஆனால் அவற்றை மறுபரிசீலனை செய்யலாம். ஒரு தனிமனிதனை சீர்திருத்துவதற்கு கல்வி மறுக்கப்படாமல் அளிக்கப்படுவதைப்போல் தாம்பத்தியம், குழந்தைப்பேறு போன்றவற்றுக்கும் அனுமதியளிக்கும்படி சட்டத்தின் விதிமுறைகளை மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம்.
ஒருவர் செய்த குற்றத்தின் வீரியத்துக்கு ஏற்றபடி குறைவான சிறைத்தண்டனை முதல் மரண தண்டனை வரை பல நிலைகள் வகைப்படுத்தப்பட்டிருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர் தவறானவர், அவர் எந்தச் சூழலிலும் திருந்த மாட்டார் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தண்டனை என்பது ஒரு மனிதரைத் திருத்தி நல்வழிப்படுத்தும் வகையிலும் அவர்களைச் சீர்திருத்தும் வகையிலும் அமையவேண்டும். ஆனால் இங்கே, அவர்களைப் பழிக்குப்பழி வாங்ககூடிய தண்டனைகள் மட்டுமே இருக்கின்றன.
Also Read: `ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்க நீர்நிலை இடங்களைப் பத்திரப்பதிவு செய்யக் கூடாது!'-சென்னை உயர் நீதிமன்றம்
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் இருக்கக்கூடிய நபருக்கு அவருடைய தனிப்பட்ட உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுகின்றன. ஒரு கைதி அனைத்தையும் துறந்துதான் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலையில் தனிமனித உரிமையோடு பச்சாதாப அணுகுமுறையோடு (empathetic approach) இதனை அணுக வேண்டும்" என்கிறார் வழக்கறிஞர் ஆதிலட்சுமி.
from Latest News
0 Comments