நகராட்சியாக இருந்த நாகர்கோவில், மாநகராட்சி ஆன பிறகு நடக்கும் முதல் தேர்தல். இதில் வெற்றிபெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால், முதல் மேயர் என்ற சிறப்பை பெறுவார்கள். எனவே மாநகராட்சியின் முதல் மேயர் ஆகும் ஆசையில் அனைத்து கட்சிகளுமே விறுவிறுப்பாக களம் இறங்கியுள்ளன. தற்சமயம் கைவசம் பதவி எதுவும் இல்லாததால் மாநகர மேயர் ஆகலாம் என மனதில் சிறு கணக்கு போட்டுக்கொண்டிருந்தனர் தி.மு.க முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பச்சைமாலும்.
ஆனால் வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்று கவுன்சிலர் ஆனபிறகுதான் மறைமுக தேர்தலில் மேயர் ஆகமுடியும். அமைச்சராக இருந்துவிட்டு கவுன்சிலருக்கு போட்டியிட முடியுமா என நினைத்து பின்வாங்கிவிட்டார்களாம். அதே சமயம் ஒவ்வொரு கட்சியிலும் கவுன்சிலராக போட்டியிடும் பலரும், கூடவே மேயர் ஆகும் கனவிலும் மிதக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியிலும் மேயர் வேட்பாளராக யாருக்கு அதிக வாய்ப்பு என அலசினோம்.
தி.மு.க-வின் மேயர் வேட்பாளர் யார் எனக் கேட்டால் மாநகர செயலாளர் மகேஷை மட்டுமே கைகாட்டுகின்றனர் அக்கட்சியினர். மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜனுக்கும், மகேஷுக்கும் இப்போது ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. ஆனாலும் எதிர் வேட்பாளர்கள் யாரும் களம் இறக்கப்படவில்லை. ஏன் என்று விசாரித்தால், சட்டசபை தேர்தல் நேர்காணலுக்குச் சென்றபோதே மேயர் தேர்வு முடிந்துவிட்டது என்கிறார்கள் தி.மு.க-வினர். சட்டசபை தேர்தலுக்கான நேர்காணலுக்கு சென்ற மகேஷ், ``நாகர்கோவில் தொகுதியை சுரேஷ்ராஜனுக்கு கொடுங்க. ஆனா, நீங்க தந்த பதவியில நான் 25 வருஷமா இருக்கேன்..." என கூறியபோதே இடைமறித்த ஸ்டாலின், "நாகர்கோவில் மேயர் சீட்டுதானே, அது உங்களுக்குத்தான்" என சொல்லி அனுப்பினாராம். முதல்வரே முடிவு செய்த வேட்பாளர் என்பதால்தான் மகேஷுக்கு எதிராக காய்நகர்த்த முடியாமல் கையை பிசைந்துகொண்டு கப்சிப்பாக இருக்கிறது எதிரணி.
Also Read: விழுப்புரம்: நேர்காணலில் மனைவி, மகன்; செஞ்சி பேரூராட்சி தலைவர் வேட்பாளரா அமைச்சர் மஸ்தான் மகன்?
நாகர்கோவில் நகராட்சியாக இருந்த சமயத்தில் பா.ஜ.க இரண்டுமுறை கைப்பற்றியுள்ளது. எனவே பா.ஜ.க-வில் சேர்மன் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு முறை சேர்மனாக இருந்த மீனாதேவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவு உள்ளது. தனிப்பட்ட முறையிலும் மீனாதேவ் தரப்பு மாநகராட்சியை கைப்பற்ற இப்போதே முனைப்புடன் பணியாற்றுகிறது. மாவட்ட பா.ஜ.க பொருளாளர் முத்துராமன், சேர்மன் ஆசையோடு எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி மற்றும் சில நிர்வாகிகளை சுற்றிவருகிறார்.
பா.ஜ.க-வில் யார் வேட்பாளராக இருந்தாலும் தேர்தலில் வெற்றிபெற வைட்டமின் 'ப' முக்கியம் என கருதுகிறார்கள். எனவே சட்டமன்ற தேர்தல் போன்று, மாநகராட்சியை கைப்பற்ற பணம் இறக்குங்கள் என சில நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார்களாம். ஆனால் சட்டமன்ற தேர்தல் போன்று உள்ளாட்சிக்கு பணம் இறக்க முடியாது என தலைமை கைவிரித்துவிட்டதால் வாட்டத்தில் இருக்கிறார்கள் நாகர்கோவில் பா.ஜ.க நிர்வாகிகள். நாகர்கோவில் மேயர் பதவியை பொறுத்தவரை கூட்டணி அடிப்படையில் தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் நேரடி போட்டி நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், காங்கிரஸ் மற்றும், அ.தி.மு.க-விலும் சிலர் மேயர் ஆசையோடு கவுன்சிலர் சீட்டுக்கு அடிபோடுகிறார்கள்!
from Latest News
0 Comments