உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் இரண்டு கட்டங்களாக பிப்ரவரி 10, 14 ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலம் முழுவதுமே பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 24 -ம் தேதி பா.ஜ.கவின் ஷிவால்கஸ்(Siwalkhas) தொகுதி வேட்பாளரான மனிந்தர்பால் சிங் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சுர்(Chur) என்னும் கிராமத்திற்கு பிர்சாரத்திற்கு சென்றார். அந்த சமயத்தில் அவருக்கு கருப்பு கொடிகள் காட்டப்பட்டதோடு, அவர் வாகனம் மீது கற்களும் சகதியும் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வந்த ஏழு கார்களும் கற்களால் சேதப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை, 85 பேர் மீது வழக்கு தொடுத்திருந்தாலும் 20 பேரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
இது குறித்து மனிந்தர்பால் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக நான் யார் மீதும் புகார் அளிக்கவில்லை. அனைவரும் நம் மக்களே. அவர்களை மன்னிக்க வேண்டும். ஆனால் இதுபோல் மறுபடி நடக்க கூடாது" என்றார். காவல்துறை அவர்களாகவே இந்த விஷயத்தில் வழக்கு பதிந்துள்ளனர். கற்கள் வீச்சில் ஈடுபட்டவர்களின் கைகளில் ராஷ்ட்ரிய லோக் தள கட்சியின் கொடிகள் இருந்ததாகவும், வீடியோ ஆதாரத்தை வைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிகூறியுள்ளனர்.
இந்த சம்பவம் மட்டும் என்றில்லை இதேபோல் பா.ஜ.கவை புறக்கணிக்கும் வகையிலான சம்பவங்கள் பத்திற்கும் மேற்பட்டவை உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்துள்ளன. இந்த தொடர் சம்பவங்களுக்கு விவசாயிகளுக்கு இருக்கும் அதிருப்தியே காரணம் என பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரம் குறித்து ராஷ்ட்ரிய லோக் தளத்தின் மூத்த தலைவர் ராஜ்குமார் சங்வான் கூறுகையில், "மனிந்தர்பாலுக்கு எதிராக நடந்த புறக்கணிப்பு பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் சிலரால் தான் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அவர் வேறு கட்சிகளில் இருந்து விட்டு பா.ஜ.கவில் சேர்ந்தவர். அந்த பொறாமை உணர்வில்தான் இது நடந்துள்ளது" என்கிறார்.
from Latest News
0 Comments