திமுக கூட்டணியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் இன்று மாலை திமுக தலைமை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் திமுக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. நேற்று முன்தினம் 28ஆம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோருடன் திமுக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டார்கள். இந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாளை மாலைக்குள் கூட்டணி கட்சிகளுடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இடப்பகிர்வு குறித்து அழைத்துப் பேசி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த அறிக்கையை 77 மாவட்ட செயலாளருக்கும் அனுப்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சென்னையில் 7 மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள், சென்னையில் 15 மண்டலங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டலத்திற்கு குறைந்தபட்சம் ஒரு சீட்டாவது கொடுக்க வேண்டும் என கேட்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவற்றுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments