ஹிந்தியில் 2012-ல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்ட படம் 'விக்கி டோனர்'. ரீமேக்காக தமிழில் 'தாராள பிரபு'வாக இந்த படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். இந்த படங்களில் ஹீரோ ஒரு விந்தணு கொடையாளர். அதாவது Sperm Donor. அப்படியான ரியல் 'தாராள பிரபு' நான் எனக் கூறுகிறார் இங்கிலாந்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் கிளைவ் ஜோன்ஸ். 'உலகின் சிறந்த விந்தணு நன்கொடையாளர்' தான் தான் என்கிறார் கிளைவ். தனது விந்தணு தானம் மூலம் இதுவரை 128 குழந்தைகள் பிறந்திருப்பதாகக் கூறுகிறார். மேலும் 9 குழந்தைகள் பிறக்க உள்ளதாகவும் கூறுகிறார்.
நம்மில் பலருக்கும் விந்தணு கொடையாளர்கள் என ஒன்று இருப்பதே 'தாராள பிரபு' படம் பார்த்த பிறகுதான் தெரிந்திருக்கும். ஆனால், மேலை நாடுகளில் இது சாதாரணம். வெளிநாடுகளில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் விந்தணு நன்கொடையாளர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வது இயல்பு.
இங்கிலாந்தின் பிரபல பத்திரிகை டெய்லி மெயில் வெளியிட்ட செய்தியின்படி, இங்கிலாந்தைச் சேர்ந்த கிளைவ் ஜோன்ஸிற்கு 66 வயதாகிறது. ஃபேஸ்புக் மூலம் தேவைகள் அறிந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இலவசமாக விந்தணு தானம் செய்து வருகிறார். அவரது குடும்பத்தில் மூன்று குழந்தைகள். இங்கிலாந்தில் 45 வயது வரைதான் விந்தணு தானம் செய்ய முடியுமாம். அதனால் அவரால் அதிகாரப்பூர்வ விந்தணு கொடையாளி ஆக முடியவில்லை என்றும் எனவேதான் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி தானம் செய்து வருவதாகவும் தெரிவிக்கிறார் கிளைவ் ஜோன்ஸ். முன்பு சொன்னது போல இதுவரை இவர் மூலம் 128 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. 9 பேர் கர்ப்பமுற்று இருக்கிறார்கள். விந்தணு தானத்தை இன்னும் சில ஆண்டுகள் தொடரப் போவதாகவும் அவரது இலக்கு 150 குழந்தைகள் எனவும் கூறுகிறார் ஜோன்ஸ்.
"பல க்ளினிக்குகள் மற்றும் விந்தணு வியாபாரிகள் பற்றி எனக்குத் தெரியும். அவர்கள் யாரும் தானம் செய்வதில்லை, மாறாக விந்தணுவை நல்ல தொகைக்கு விற்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. குடும்பங்கள் எனக்கு அனுப்பும் குறுஞ்செய்திகள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. ஒருமுறை என் பேத்தியை எனக்கு கொடுத்ததற்கு நன்றி என எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் ஒருவர். அது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. குழந்தை பாக்கியம் இல்லாத குடும்பங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்பதில் மனநிறைவு கிடைக்கிறார்" என்கிறார் கிளைவ் ஜோன்ஸ்.
from Latest News
0 Comments