Ticker

6/recent/ticker-posts

Ad Code

Doctor Vikatan: தலைவலிக்காக அணியும் கண்ணாடியை எப்போதும் பயன்படுத்த வேண்டுமா?

தலைவலிக்காக கண்ணாடி பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன். தொடர்ந்து அதைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது தலைவலிக்கும்போது மட்டும் பயன்படுத்தினால் போதுமா?

- பாலாஜி (விகடன் இணையத்திலிருந்து)

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

``தலைவலிக்காக கண்ணாடி அணிந்ததாகக் குறிப்பிட்டுள்ள நீங்கள், உங்கள் பிரச்னைக்காக முறைப்படி மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பேரில்தான் கண்ணாடி அணிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கண்களில் பவர் இருப்பதும் (Refractive Error), தலைவலியும் இருவேறு பிரச்னைகள். ஆனால் கண்களில் பவர் இருப்பவர்களுக்கு அதன் அறிகுறியாக தலைவலியும் இருக்கலாம். அது தவிர, தலைவலிக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள் போன்ற வேறு காரணங்களும் இருக்கலாம். எனவே முதலில் தலைவலிக்கான சரியான காரணம் கண்டறியப்பட வேண்டும்.

உங்களுக்கு ஏற்பட்ட தலைவலிக்கு இதுபோன்ற எந்தக் காரணமும் இல்லை, கண் தொடர்பான பிரச்னைதான் காரணம் என்ற நிலையில்தான் கண்ணாடி அணியப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும். மைனஸ் பவர் பாதிப்பான கிட்டப்பார்வை (Myopia) அல்லது ப்ளஸ் பவர் பாதிப்பான (Hypermetropia) அல்லது கண்களில் வளைவு உள்ளதைக் குறிக்கும் சிதறல் பார்வை பிரச்னை (Astigmatism) போன்றவை இருக்கலாம்.

Spectacles (Representational Image)

Also Read: Doctor Vikatan: தடுப்பூசிக்கே கட்டுப்படாத வைரஸ், மாஸ்க் அணிவதால் மட்டும் நெருங்காமலிருக்குமா?

இவற்றில் ஏதேனும் ஒன்று உறுதிசெய்யப்பட்டால் கண்ணாடி அணிய வேண்டும். அதுவும் தொடர்ந்து அணிய வேண்டும். சிலருக்கு கண்ணாடி அணிந்ததும் தலைவலி சரியாகலாம். அதற்காக இனி கண்ணாடி தேவையில்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது. தலைவலிக்குக் காரணமான கண்ணின் பவருக்காகவே நீங்கள் கண்ணாடி அணிகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News

Post a Comment

0 Comments