நீதி மற்றும் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை சார்பில் 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீடு வெளியிடப்பட்டது. இந்த குறியீடு பத்து துறைகள் மற்றும் 58 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்டதாகும். இதில், வணிகம் - தொழில், விவசாயம், பொது உள்கட்டமைப்பு, பொதுச் சுகாதாரம், பொருளாதார நிர்வாகம், மனித வள மேம்பாடு, சமூக நலன், நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை போன்ற துறைகள் அடங்கும்.
இந்த குறியீட்டில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் `ஏ குழு' பிரிவில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்திருக்கிறது. மற்ற பிரிவுகளைப் பொறுத்தவரை, பொதுச் சுகாதாரப் பிரிவில் கேரளா, மனித வள மேம்பாடு பிரிவில் பஞ்சாப், பொது உள்கட்டமைப்பு பிரிவில் கோவா, பொருளாதார நிர்வாகம் பிரிவில் குஜராத், விவசாயம் பிரிவில் ஆந்திரா போன்ற மாநிலங்கள் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றன. கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நல்லாட்சி குறியீட்டில் மொத்தமாக 5.62 புள்ளிகளைப் பெற்று தமிழகம் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறை:-
சுகாதாரத்துறை செயல்பாடுகள் குறித்துக் கடந்த நான்கு வருடங்களாக நிதி ஆயோக் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு வருகிறது. 2019-2020-ம் நிதியாண்டின் செயல்பாடு குறித்து வெளியான பட்டியலில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாகக் கேரளா முதலிடம் பிடித்திருக்கிறது. மேலும், பெரிய மாநிலங்களின் பட்டியலில் கடைசி மாநிலமாக உத்தரப்பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்த அறிக்கை வந்த பின்னர், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது ட்விட்டர் பக்கத்தில், ``நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத்துறைக்கான பட்டியலில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகம் 2-ம் இடத்தை பிடித்திருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார். தற்போது வந்திருக்கும் அறிக்கை 2019-2020-ம் நிதியாண்டுக்கானது. அந்த காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்தவர் பழனிசாமி. அதனால், அமைச்சரின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க ஆட்சி சாதனைகளை தி.மு.க சொந்தம் கொண்டாடுவதாக அ.தி.மு.க-வினர் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் மற்றும் கழக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேலிடம் பேசினோம். ``தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகிவிட்டது, அதற்கு தி.மு.க தான்காரணம் என்று சொல்லும் அவர்கள். அதே தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை இருக்கிறது ஆனால் அதற்குக் கடந்த அ.தி.மு.க ஆட்சி தான் காரணம் என்று குறை கூறுகிறார்கள். ஏதாவது குறை குற்றம் இருந்தால் மட்டும் அதற்குக் காரணம் நாங்கள் என்று கூறி எதிர்மறை அரசியல் செய்து வருகிறது தி.மு.க. எங்கள் ஆட்சியில் கட்டிய கட்டடங்களையும், பாலங்களையும் இவர்கள் பெயர்களைப் போட்டுத் திறப்பு விழா நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது இன்னொருவரின் குழந்தைக்கு இவர்களின் பெயரை வைப்பது போல இருக்கிறது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், ``உயர்கல்வியைப் பொறுத்தவரை இந்திய அளவில் 28 சதவிகிதம், ஆனால் தமிழகத்தில் 57 சதவிகிதம். கல்விக்காக அதிக அளவு நிதி ஒதுக்கியது அ.தி.மு.க அரசுதான். கடந்த நான்கு ஆண்டுகளாகச் சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதலிடம். ஏழு ஆண்டுகளாக வேளாண்மையில் முதலிடம். ஆறு ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம். இந்த ஆட்சியில் தி.மு.க புதிதாக எதுவுமே செய்யவேண்டாம். தமிழகத்தின் வளமான வளர்ச்சிக்கு நாங்கள் அனைத்தையுமே செய்து வைத்துவிட்டோம். எதையும் மாற்றம் செய்யாமல் இருந்தாலே தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறது தி.மு.க. இதை மக்கள் இப்போது தான் உணர்ந்து வருகிறார்கள்" என்றார்.
Also Read: ஒண்ணு போனா இன்னொண்ணு... மாரிதாஸ்மீது குவியும் வழக்குகள் - பின்புலம் என்ன?
இந்த விவகாரம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``பாலங்கள் கட்டியதும் கட்டடங்கள் கட்டியதும் அ.தி.மு.க ஆட்சியில்தான். அதை யாரும் மறுக்கவில்லை. அதேபோல, தரமற்ற பாலங்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டதும் அ.தி.மு.க ஆட்சியில்தான். அதை அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்கும்போது தமிழகத்தில் கொரோனா நிலை எப்படி இருந்தது என்று எல்லாருக்குமே தெரியும். முதல்வரின் பல்வேறு நடவடிக்கைகளால்தான் 37,000 வரை சென்ற தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் ஆக்ஸிஜன் கையிருப்பு 220 மெட்ரிக் டன் தான் இருந்தது. அன்றைய தேவை 530 மெட்ரிக் டன். தேவையான ஆக்ஸிஜனை வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் உடனடியாக பெற்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தவர் முதல்வர் ஸ்டாலின் தான்.
அ.தி.மு.க ஆட்சியில் தடுப்பூசி போடுவது மிகவும் குறைவாக இருந்தது. தற்போது தி.மு.க ஆட்சியில் இந்திய அளவில் அதிக அளவு தடுப்பூசி போடப்படுகிறது. அதுமட்டுமின்றி சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு என்று அனைத்துமே இந்த ஆட்சியில் தான் நிறைவேற்றப்படுகிறது. தமிழகத்தில் சுகாதாரத்துறை உள்கட்டமைப்பில் 2006-2011 காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இன்று சுகாதாரத்துறை இந்த அளவு சிறப்பாக இருப்பதற்கு அது ஒரு முக்கிய காரணம். அது நடந்தது தி.மு.க ஆட்சியில்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. பெரும் முயற்சியால் சுகாதாரத்துறையை முன்னேற்றியவர் முதல்வர் மு.க ஸ்டாலின் என்பதையும், ஊழல் செய்து கட்டப்பட்ட கட்டடங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது பழனிசாமி என்பதை வரலாற்றிலிருந்து யாராலும் மறைக்க முடியாது" என்றார்.
Also Read: நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு: ஸ்கோர் செய்த திமுக... கோட்டைவிட்ட அதிமுக!
from Latest News
0 Comments