திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரின் மகள் பிரியா (23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 3 ஆண்டுகளாக காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் படித்தார். அப்போது அதே பல்கலைக்கழக சோதனைக் கூடத்தில் உதவியாளராக பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (43) என்பவருடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் மாணவி பிரியாவை கல்லூரி ஊழியர் செந்தில் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார்.
செந்தில் திருமணமானவர் மேலும் அவர் குழந்தை இல்லாததால் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்தத் தகவல் மாணவிக்கு தெரியவந்ததும் அவர் செந்திலுடன் பழகுவதை தவிர்த்திருக்கிறார். இதையடுத்து அங்கு கல்லூரி படிப்பை முடித்த மாணவி, ஆராய்ச்சி படிப்பை கற்க திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் படித்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் அருண்பாண்டியன் (24) என்பவருடன் மாணவி பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் செந்தில், மாணவி பிரியாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார். இதுகுறித்து பிரியா, அருண்பாண்டியனிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து செந்திலை கொலை செய்ய பிரியாவும் அருண்பாண்டியனும் திட்டமிட்டிருக்கின்றனர். அதற்காக கடந்த 29-ம் தேதி கேளம்பாக்கத்தில் ஒரு கடையில் கத்தியை அருண்பாண்டியன் வாங்கியிருக்கிறார். பின்னர் செந்திலிடம் போனில் பேசிய மாணவி பிரியா, நாம் இருவரும் சந்திக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதனால் சந்தோஷமடைந்த செந்தில், மாணவியைச் சந்திக்க பல்கலைக்கழகத்துக்கு பைக்கில் சென்றார். அப்போது மாணவி படிக்கும் பல்கலைக்கழக வாசலில் செந்தில் காத்திருந்தார்.
Also Read: மகளின் அறைக்குள் நுழைந்த காதலன்; குத்திக் கொலை செய்துவிட்டு 'திருடன்' என நாடகமாடிய தந்தை கைது!
பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியில் வந்த மாணவி பிரியாவைப் பார்த்ததும் செந்தில், அவரிடம் பேசியிருக்கிறார். அப்போது மாணவி, ``நான் அருண்பாண்டியன் என்பவரைக் காதலிக்கிறேன். அதனால் என்னை தொந்தரவு செய்யாதீங்க” என்று கூறியிருக்கிறார். அதற்கு செந்தில், `உன்னை என்னால் மறக்க முடியாது’ என தெரிவித்திருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அருண்பாண்டியன், செந்திலிடம் பிரியாவை நான் காதலிக்கிறேன். அதனால் பிரியாவுக்கு இனி நீ தொல்லைக் கொடுக்க வேண்டாம் என்று கூறினார்.
அதைக்கேட்டு ஆத்திரமடைந்த செந்தில், பிரியாவை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அருண்பாண்டியனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அருண்பாண்டியன், செந்திலின் கழுத்தை அறுத்திருக்கிறார். பின்னர் கத்தியால் அவரை சரமாரியாக குத்தியிருக்கிறார். அதனால் பைக்கில் அமர்ந்தபடியே செந்தில் உயிரிழந்தார். பல்கலைக்கழகம் அருகே நடந்த இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிரியாவும் அருண்பாண்டியனும் ஆட்டோவில் ஏறி தப்பினர். இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், செந்திலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பிரியா, அருண்பாண்டியன் ஆகியோரை போலீஸார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
from Latest News
0 Comments