Ticker

6/recent/ticker-posts

Ad Code

``சீமான், பாஜக-வுக்கு ஆதரவாக இருந்ததில்லை; இருக்கப்போவதும் இல்லை!" - சொல்கிறார் நாராயணன் திருப்பதி

'தி.மு.க வெர்சஸ் அ.தி.மு.க' என்ற அரசியல் அரிச்சுவடியை 'தி.மு.க வெர்சஸ் பா.ஜ.க'-வாக மாற்றத் துடிக்கும் முயற்சியாக, தி.மு.க அரசுக்கு எதிராக அறிக்கை, போராட்டம், விமர்சனம் என தொடர்ச்சியாக தம் கட்டிவருகிறது தமிழக பா.ஜ.க!

இந்தச் சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினேன்...

``'மத்திய அரசுத் திட்டங்களை மாநில அரசுத் திட்டங்களாக மாற்றி அறிவிக்கிறார்கள்' என்றது தமிழக பா.ஜ.க. ஆனால், தற்போது பிரதமரை அழைத்தே மருத்துவக் கல்லூரிகளை திறக்கப்போகிறார்கள். அப்படியெனில் பா.ஜ.க-வின் குற்றச்சாட்டு பொய்யாகி விட்டதா?"

பிரதமர் மோடி

``இல்லை... மருத்துவக் கல்வி பொதுப்பட்டியலில் வந்துவிட்டது. மேலும் மத்திய அரசின் நிதி உதவியினால்தான் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகின்றன. எனவேதான் திறப்புவிழாவுக்கு பிரதமரை அழைக்கிறார்கள். அதேசமயம், கடந்தகாலத்தில், ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல், நாட்டு மக்களின் பிரதமராக தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்த பிரதமர் மோடியைப் பார்த்து, 'கோ பேக் மோடி' என்று தி.மு.க-வினர் சொன்னது ஜனநாயக விரோதம்.

மேலும், 100 நாள் வேலை, அனைவருக்கும் வீடு, கொரோனா தடுப்பூசி போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்துவரும் நிதியை மறைத்து, மாநில அரசே செயல்படுத்துவது போன்று தி.மு.க அரசு விளம்பரம் தேடிக்கொள்கிறது என்பது உண்மைதான். உதாரணத்துக்கு கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசின் நிதியிலிருந்துதான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், இங்கே முதல்வரின் படத்தை மட்டுமே விளம்பரம் செய்கிறார்கள். முதல்வர் படத்தோடு பிரதமரின் படத்தையும் சேர்த்து அச்சடிக்க வேண்டும்தானே?''

``ஆனால், 'கொத்தடிமை போல் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில்தான் மாநில அரசுகள் உள்ளன' என மத்திய அரசைக் குற்றம்சாட்டுகிறாரே தமிழக முதல்வர்?"

''ஜனநாயக நாட்டில், இதுபோன்ற விமர்சனங்களை செய்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதேசமயம், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அரசுகள் செயல்பட்டு வரும்போது, இதுவரை யாருமே சொல்லாத வகையில், இப்படியொரு குற்றச்சாட்டை முதல்வர் கூறியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி.

இந்தியப் பொருளாதாரத்தில், தமிழக அரசின் பங்கு மிகப்பெரியது. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனாலும்கூட, 'நிதிக்காக அடிமைபோல் கையேந்தி நிற்கிறோம்' என்று முதல்வர் சொல்லியிருப்பது, 'ஒன்றிய அரசோடு ஒன்றாமல் இருக்கிறார்கள்' என்ற மனப்பான்மையின் வெளிப்பாடு.

மத்திய அரசை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு, தொடர்ச்சியாக 'ஒன்றிய அரசு' என்று உள்நோக்கத்தோடு கூறிவருவதைப் பார்த்தால், இவர்கள் 'குன்றிய அரசாக' இருக்கிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.''

ஸ்டாலின்

``அப்படியென்றால், 'சக்திவாய்ந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி எப்படி பாராட்டுகிறார்?''

``தமிழகத்தின் முதல் மனிதர், ஆளுநர். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அது அவரது உரிமை. அவர் சொல்கிற கருத்துக்கும் பா.ஜ-க-வுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதற்கு நாங்கள் பதில் கருத்தும் சொல்லமுடியாது.

அதேசமயம், ஆளுநர் அப்படிச் சொல்கிறாரே என்று கேட்டால், ஆளுநர் ஏன் சொன்னார், எப்போது சொன்னார், எதற்காக சொன்னார் என்பதையெல்லாம் பார்க்கவேண்டும்.''

``அமைச்சர் சேகர்பாபுவை 'திருடன்' என்றும், நிதி அமைச்சரை 'பைத்தியக்காரர்' என்றும் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளாரே?''

``ஒருவரை 'திருடன்' என்று சொல்வது தவறென்றால், 'நாய்' என்று மட்டும் சொல்லலாமா? எனவே, ஹெச்.ராஜா குறித்து அமைச்சர் சேகர்பாபு என்ன கூறினார் என்பதைப் பார்த்தால்தான், ஹெச்.ராஜா கூறியது சரியா, தவறா என்று நான் சொல்லமுடியும்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பா.ஜ.க-வினரை மட்டுமல்ல... தி.மு.க-வின் மூத்த தலைவரான டி.கே.எஸ்.இளங்கோவனையே மிகக் கேவலமான முறையில் பேசியிருக்கிறார். ஆக, நம்மைத் தரம் தாழ்ந்து பேசுபவர்களுக்கு அவர்களது மொழியிலேயேதான் பதிலடி கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் பா.ஜ.க-வினருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. இதைப் புரிந்துகொண்டதால்தான் பி.டி.ஆர் இப்போது அமைதியாகிவிட்டார்.''

ஹெச்.ராஜா

``பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டில் சீமான் இயங்கி வருவதால்தான், மத்திய பா.ஜ.க அரசு அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கிறதே காங்கிரஸ்?''

``சீமான், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று சொல்பவர்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். ஏனெனில், சீமான் இதுவரையில் எங்களுக்கு ஆதரவாக இருந்ததும் இல்லை; இருக்கப்போவதும் இல்லை.

ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள் நாங்கள்தான் என்று சீமான் சொன்னால், அவர் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட வேண்டியதுதானே. தங்கள் கட்சித் தலைவரைவிடவும் கூட்டணிதான் பெரிது என்று காங்கிரஸ் கட்சியினர் நினைக்கிறார்களா...''

Also Read: பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; வழக்கறிஞருக்கு தடை விதித்த பார் கவுன்சில்!

`` 'ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்றோம்' என அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் சீமான் பேசியிருக்கிறார். மேலும், ராஜீவ்காந்தி மரணம் குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுதான் விசாரணை செய்துவருகிறது எனும்போது, மாநில அரசு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?''

சீமான்

``இல்லையில்லை... ராஜீவ்காந்தி மரணம் குறித்தான வழக்கு வேறு, சீமானின் சர்ச்சைப் பேச்சு என்பது வேறு. சீமான் இப்படிப் பேசியிருக்கிறார் என்றால், அது சட்டம் - ஒழுங்கு சார்ந்த பிரச்னையாகத்தான் பார்க்க வேண்டும். எனவே, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது.

அதனால்தான் நாங்குநேரியில், சீமான் இப்படிப் பேசியிருக்கிறார் என்று தெரிந்த உடனேயே, 'சீமானைக் கைது செய்யவேண்டும்' என்று காங்கிரஸுக்கும் முன்பே நான்தான் குரல் எழுப்பியிருந்தேன்.''

Also Read: வடமாவட்டங்களில் பதுங்கிய ராஜேந்திர பாலாஜி? - திருப்பத்தூர் அதிமுக பிரமுகர்கள் 2 பேரிடம் விசாரணை!

``நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தாமல் பிரதமர் வாரணாசி சென்றுள்ளார் எனில், 'பிரதமரை நாடாளுமன்றத்தில் காணமுடியாது. வாரணாசி, அயோத்தி போன்ற இடங்களில்தான் காணமுடியும்' என்ற ப.சிதம்பரத்தின் விமர்சனம் உண்மைதானே?''

``அப்படியில்லை.... எல்லா தினங்களிலும் பிரதமர், டெல்லியிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. டிசம்பர் 13-ம் தேதியன்று நாடாளுமன்ற சபாநாயகர் உட்பட பல்வேறு தலைவர்களும், உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். வாரணாசி சென்றிருந்த பிரதமரும், அங்கிருந்தபடியே அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மேலும் தன்னுடைய பேச்சு மற்றும் குறிப்புகளிலும் இதுகுறித்து விரிவாகவே விளக்கியிருக்கிறார். எனவே, இதையெல்லாம் விமர்சிப்பதென்பது மலிவான அரசியல்!''

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

``தண்ணியே இல்லாத இடத்தில் போட் ஓட்டிய அண்ணாமலை, அமெரிக்காவில் இருக்க வேண்டிய ஆள்' என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கிண்டல் செய்கிறாரே?''

``ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து இதுபோன்று எங்கள் கட்சித் தலைவரை அவமரியாதையாகப் பேசிவருவதைக் கண்டிக்கிறோம். படகில் பயணம் செய்பவர்கள் கரையிலிருந்துதான் படகைக் கடலுக்குள் செலுத்துவார்கள். இந்த அடிப்படை அறிவுகூட காங்கிரஸ் கட்சியினருக்கு இல்லையே. ஒருவேளை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடலுக்கு செல்லவேண்டும் என்றால், படகைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டுதான் செல்வார் போல. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு உடலளவிலும் மனதளவிலும் வயாதாகிவிட்டது. அதனால்தான், இப்படியெல்லாம் பிதற்றிவருகிறார்.''



from Latest News

Post a Comment

0 Comments