Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஓடும் ரயிலில் பிறந்தநாள் கொண்டாட்டம்: அபாய சங்கிலியை இழுத்த மாணவர்களால் பரபரப்பு

ஆவடியில் ஓடும் மின்சார ரயிலில் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய கல்லூரி மாணவர்களில் ஒருவர், கொண்டாட்டத்தின்போது ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் நான்கு மாணவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதால், அவர்களை விடுவிக்கக் கோரி ஆவடி மற்றும் இந்துகல்லூரி ரயில் நிலையங்களில் ரயிலை மறித்து மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அடுத்தடுத்த இச்சம்பவங்களால், ரயில் தாமதமானது மட்டுமன்றி மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டிருந்திருக்கிறது.

சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக நேற்று மாலை சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலொன்றில், மாநில கல்லூரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். இந்த ரயிலில் வசீகரன் என்ற மாணவரின் பிறந்தநாளை சக மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த மின்சார ரயில் ஆவடி ரயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தபோது, ஒரு மாணவர் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். இதனால் மின்சார ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

image

தொடர்ந்து, அபாய சங்கிலியை இழுப்பதற்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவர் வசீகரன் உட்பட மொத்தம் 4 மாணவர்களை காவல்துறையினர் ஆவடி ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால், சக மாணவர்களை விடுவிக்க கோரி ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு அமர்ந்து பிற மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆவடி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசார் தரப்பில் ‘விசாரணை முடிந்த உடன் மாணவர்களை விடுதலை செய்யப்படுவர்’ என உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று, மாணவர்கள் ரயில் மறியலை கைவிட்டனர். பின்னர், அதே ரயிலில் ஏறி அவர்கள் பயணித்தனர்.

ஆனால் அந்த ரயில் ஆவடியை அடுத்த இந்துக்கல்லூரி ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ‘இதுவரை கல்லூரி மாணவர்கள் வசீகரன் உட்பட பிற மாணவர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை’ எனக்கூறி, அதை கண்டித்து மீண்டும் மாணவர்கள் அனைவரும் ரயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர், தகவலறிந்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதன்பின்பு, மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை உடனடியாக விடுவிப்பதாக உறுதி அளித்தனர். அதேபோல, போலீசார் மாணவர்களை விடுவிக்கவும் செய்தனர். இதன் பிறகு, சக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்களின் ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் தாமதமாக சென்றது. உடன் அந்த ரயிலில் பயணித்த பிறருக்கும் நேரமானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்தி: கொரோனா பாதித்த மாநிலம்: உத்தரப் பிரதேச அரசு அறிவிப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments