Ticker

6/recent/ticker-posts

Ad Code

திருமலை திருப்பதி காலண்டர்கள் அமேசானில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றனவா? - புகாரும் விளக்கமும்!

புத்தாண்டு பிறப்பை ஒட்டி ஒவ்வோர் ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அழகிய காலண்டர் மற்றும் டைரிகள் வெளியிடப்படுவது வழக்கம். வண்ணமயமான இந்த காலண்டர்கள் மற்றும் டைரிகளில் வேங்கடாசலபதியின் படங்கள் அலங்கரிக்கும். எனவே பக்தர்கள் இவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள். இந்த ஆண்டும் அதேபோன்று காலண்டர்களையும் டைரிகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமேசான் நிறுவனம் மற்றும் இந்தியா போஸ்டுடன் இணைந்து இணையம் மூலம் காலண்டர்கள் மற்றும் டைரிகளை விற்கும் முயற்சியில் இறங்கியது.
திருமலை திருப்பதி காலண்டர்கள்

அதன்படி அதற்கான விற்பனை தொடங்கியது. புத்தாண்டை ஒட்டி நிறைய வாடிக்கையாளர்கள் அமேசான் மூலம் இவற்றை வாங்கத்தொடங்கினர். ஆனால் இதில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக இடதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

ரூ.15 மதிப்புள்ள, பத்மாவதி தாயார் படம் போட்ட காலண்டர்கள் இணையத்தில் 299 ரூபாய் என விலை இடப்பட்டு பின்பு தள்ளுபடிக்குப் பின் 149 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 130 ரூபாய் மதிப்புள்ள டைரிகள் 799 ரூபாய் என விலையிடப்பட்டு 499 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன என்னும் குற்றச்சாட்டை சி.ஐ.டி.யு வைச் சேர்ந்த கந்தரப்பு முரளி முன்வைத்தார்.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி விளக்கம் அளித்தபோது,

"திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில்கள், அலுவலகங்கள் இருக்கும் ஊர்களில் இந்த டைரிகளும் காலண்டர்களும் தாராளமாகக் கிடைக்கின்றன. அங்கு வழக்கமான விலையிலேயே பெற்றுக்கொள்ளலாம். ஆனால் உலகமெங்கும் இருக்கும் திருப்பதி பக்தர்களுக்கு இந்த டைரியும் காலண்டரும் இந்தப் புத்தாண்டு நேரத்தில் போய்ச்சேரும் விதமாக அமேசான் மற்றும் இந்தியா போஸ்ட் மூலம் விற்கும் ஏற்பாட்டைச் செய்திருக்கிறோம். அதில் அதிகமாக வசூலிக்கப்படும் தொகையானது அந்தப் பொருளை கொண்டு சேர்ப்பதற்கானது. அங்குதான் வாங்கவேண்டும் என்று பக்தர்களுக்குக் கட்டாயமில்லை. தங்களுக்கு அருகில் இருக்கும் தேவஸ்தானத் தகவல் மையங்கள் மற்றும் கோயில்களில் வாங்கிக்கொள்ளலாம். அவ்வண்ணமேதான் தற்போது பக்தர்கள் அதை வாங்குகிறார்கள். இதில் எந்த முறைகேடும் இல்லை” என்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அமேசானில் திருப்பதி காலண்டர்
இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து அமேசான் மூலம் காலண்டர்கள் மற்றும் டைரிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றனவா என்று தேடிப்பார்த்தபோது அவை தற்போது விற்பனைக்கு இல்லை என்று தெரியவருகிறது.


from Latest News

Post a Comment

0 Comments