Ticker

6/recent/ticker-posts

Ad Code

குப்பை அள்ளும் வண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள்! - இது விழுப்புரம் அவலம்

விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் நேற்றும் (28.12.2021) இன்றும் (29.12.2021) 100% தூய்மை பணிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தூய்மை பணியை செய்வதற்காக... திண்டிவனம், கோட்டகுப்பம் ஆகிய இரு நகராட்சிகளில் இருந்தும்; வளவனூர், செஞ்சி, விக்கிரவாண்டி, மரக்காணம், அனந்தபுரம், திருவெண்ணைய்நல்லூர், அரகண்டநல்லூர் ஆகிய 7 பேரூராட்சிகளில் இருந்தும் 542 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு இப்பணியானது தொடங்கப்பட்டது.

கொடியசைத்து துவங்கி வைக்கும் அமைச்சர் பொன்முடி

இதற்காக 13 ஜே.சி.பி இயந்திரங்கள் உட்பட 53 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சியில், முதல் நாளாகிய நேற்று (28.12.2021) 1 முதல் 21 வார்டுகள் வரையிலும், இன்று 22 முதல் 42 வார்டுகளிலும் தூய்மை பணிகள் நடைபெறுகிறது. இந்த பணியின் போது, கட்டட கழிவுகளை அகற்றுதல், சாலைகளில் உள்ள புதர், செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணியை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி. இப்பணிக்காக அழைத்துவரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும், குப்பைகள் அள்ளப்படும் வண்டிகளில் கூட்டம் கூட்டமாக ஏற்றிச் செல்லப்படும் அவல நிலை புதிய பேருந்து நிலையத்திலேயே நிகழ்ந்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களுக்கு உரிய மதிப்பை அளிக்காமல், தனி வாகனம் கொண்டும் அழைத்துச் செல்லாமல்... குப்பைகள் அள்ளப்படும் நகராட்சி, பேரூராட்சி வண்டிகளில் அழைத்துச் செல்லவதை என்னவென்று சொல்லவது என வருந்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சம்பவ இடத்தில் நகராட்சி ஆணையர்

தற்போது கொரோனா பெருந்தொற்று... ஒமைக்ரான், டெல்மைக்ரான் எனும் விஸ்வரூபத்தை எடுத்துள்ள நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இந்த தூய்மைப் பணியாளர்கள் நடத்தப்பட்டுள்ள விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயல்கள் அனைத்தும், விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா முன்னிலையில் நிகழ்ந்தது தான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Also Read: நீலகிரி: `குப்பை வண்டியில் கூட்டமாக ஏற்றிச் செல்லப்படும் தூய்மைப் பணியாளர்கள்!’ - தொடரும் அவலம்

இது தொடர்பாக விளக்கம் கேட்க விழுப்புரம் நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டோம். ``நான் மீட்டிங்கில் இருக்கிறேன். சிறிது நேரம் கழித்து அழைக்கவும்" என்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்தோம். ``அது துப்புரவு வாகனங்கள் இல்லை. சிறப்பு வாகனங்களை ஏற்பாடு செய்து தான் பணியாளர்களை அனுப்பி வைத்தோம். அந்த மாதிரி துப்புரவு வாகனங்களில் யாரையும் அனுப்பவில்லை. மேலும், நான் விசாரித்துவிட்டு சொல்கிறேன்" என்றார்.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!



from Latest News

Post a Comment

0 Comments