நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ‘மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி’யில் 5வது நாளான நேற்று, 10 க்கும் மேற்பட்ட மூத்த கானா கலைஞர்கள் இசைக்கருவிகள் முழங்க உற்சாகமூட்டும் கானா பாடல்களை பாடி அரங்கேற்றினர். சென்னை தி நகரில் உள்ள கிருஷ்ணா கான சபாவில் இந்நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாடலாசிரியர் கபிலன், திமுக செய்தித்தொடர்பாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டனர். கானா ஜூலி குமார், கானா பாஸ்கர், கானா நித்யா உள்ளிட்ட கலைஞர்கள் பாடி அசத்தினர். அவர்களின் குரலில், அந்த அரங்கமே அதிர்ந்தது. பார்வையாளர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து அரங்கின் மையப்பகுதிக்கு வந்து ஆடிப்பாடிய காட்சிகளும் அரங்கேறின. நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் எளிய வார்த்தைகளைக்கொண்டு கானா பாடல்கள் எழுத்தப்படுவது வழக்கம். அதன்மூலம் பாடகர் நினைக்கும் உணரும் கருத்த்துகளை கேட்பவர்களுக்கு சிரமில்லாமல் கடத்த முடியும்.
நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய கானா கலைஞர்கள், “கானா இசை முந்தைய காலங்களில் துயர நிகழ்ச்சிகளில் மட்டுமே பாடப்பட்டு வந்தது. ஆனால் அனைத்து வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த உதவும் கருவியாகியூள்ளது. தற்போது சினிமாத்துறை வரை கானா இசை தடம் பதித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறினர். எனினும் தற்போதும் கூட சில வீடுகளில் குழந்தைகள் கானா பாடல்கள் பாட விரும்பினால் பெற்றோர்கள் அதை ஏற்பதில்லை எனவும் அந்த நிலை மாற வேண்டும் எனவும் கலைஞர்கள் கூறினர். குறிப்பாக பெண் பிள்ளைகள் கானா கலையில் கால்பதிப்பதை குடும்பத்தினர் ஊக்குவிக்க வேண்டும் என கூறினர்.
கானா இசைக்கான மேடைகள் அதிகரித்து கானா இசையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட வேண்டும் என்ற ஆசையும் கோரிக்கையும் அங்கிருந்த கலைஞர்கள் பேச்சில் வெளிப்பட்டது.
தொடர்புடைய செய்தி: "சாதியற்ற சமத்துவ முன்னெப்பு" - மதுரையில் 'மார்கழியில் மக்களிசை விழா'
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments