தலைநகர் டெல்லியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை காற்றில் பறக்கவிட்ட இரண்டு சந்தைகளை மூடியுள்ளது டெல்லி அரசு. டெல்லியின் வடகிழக்கு பகுதியான சீலம்பூர் பகுதியில் அமைந்துள்ள பழங்கள் விற்பனை செய்யும் சந்தை மற்றும் நேரு சந்தையை டெல்லி அரசு மூடியுள்ளது.
இன்று (டிசம்பர் 31) இரவு 10 மணி வரை இரண்டு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும் என டெல்லி பேரிடர் மேலாண்மை நிர்வாக குழு தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் வணிக ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என யாரும் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்கவில்லை என அரசுக்கு வந்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதி கொரோனா தொற்றை பரப்பும் ஹாட்ஸ்பாட்டாக மாறிவிடக் கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை கருதி சந்தைகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது டெல்லி அரசு.
இவையன்றி திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பா மாதிரியானவை செயல்பட தடை விதித்துள்ளது டெல்லி அரசு. டெல்லி அரசு ‘மஞ்சள் நிற அலர்ட்’ விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒமைக்ரானை தடுக்க இரவு நேர ஊரடங்கும் டெல்லியில் அமல் செய்யப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments