தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில், தாமரைக்குளம் அருகே அரசுப் பள்ளி கட்ட இடம் தேர்வு செய்தபோது, அரசு புறம்போக்கு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிலர் அரசு அதிகாரிகளின் துணையுடன் பல ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை நடத்தினார்.
அதில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இந்த நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரியகுளம் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனிநபர் சிலர் அபகரித்திருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து முறைகேடாக பட்டா வழங்கப்பட்டதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாக மாற்றப்பட்டன. மேலும், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்த புகார்களின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய ஆனந்தி, ஜெயப்பிரிதா, தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், நில அளவையர்கள் மற்றும் தனிநபர்கள் என மொத்தம் 14 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆனந்தி தற்போது பழனி ஆர்.டி.ஓ.வாகவும், ஜெயப்பிரிதா திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட அளவில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த முறைகேடு கடந்த 2016 -ம் ஆண்டில் இருந்து 2018 -ம் ஆண்டு கால கட்டத்தில் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலத்தில் கனிமவள கொள்ளையும் நடந்துள்ளது. இதனால், இந்த கால கட்டத்தில் தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறை, கனிமவளத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றிய அதிகாரிகள், அலுவலர்கள் குறித்த பட்டியலை ரகசிய அறிக்கையாக அளிக்க தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு கடிதம் வந்தது. அதன்பேரில் கலெக்டர் விசாரணை நடத்தி ரகசிய அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் அபகரிக்கப்பட்ட நிலத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சென்னையில் இருந்து வந்த கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட கனிம வளங்களின் அரசு மதிப்பு சுமார் ரூ.4 கோடியே 13 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அபராதம் விதிக்க பெரியகுளம் சப்-கலெக்டருக்கு, விரிவான அறிக்கையை கனிமவளத்துறையினர் சமர்ப்பித்துள்ளனர். அதில் கொள்ளையடிக்கப்பட்ட கனிம வளத்தின் மதிப்பில் இருந்து ஒரு மடங்கில் இருந்து 15 மடங்கு வரை அபராத தொகையாக விதிக்கலாம் என்றும், எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவை சப்-கலெக்டர் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 -ம் ஆண்டிலேயே வடவீரநாயக்கன்பட்டியில் அரசு நிலங்களில் விதிமீறி மண் எடுக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. அப்போது அங்கு விசாரணை மேற்கொண்ட கனிமவளத்துறையினர், கனிமவள கொள்ள நடத்திருப்பதை உறுதி செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர். இதனால் மீண்டும் அதேபகுதி உள்பட பல இடங்களில் அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்டு பல கோடி மதிப்பிலான கனிம வளங்களை அரசியல்பலம் கொண்ட புள்ளிகள் அபகரிப்பதைத் தொடர்ந்தனர். எனவே அந்தக் காலகட்டத்தில் பணியிலிருந்த கனிமவளத்துறை அதிகாரிகளையும் விசாரணை வளைத்திற்குள் கொண்டுவந்தால் இன்னும் பலர் சிக்குவார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர். .
from Latest News
0 Comments