மேற்கு வங்கத்தையொட்டிய திரிபுரா மாநிலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக நீண்டகாலம் திகழ்ந்தது. நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக் சர்க்கார் என மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆட்சியில் முதல்வர்களாக இருந்தனர். மேற்கு வங்கத்தில் 2011-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, அதனால் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, திரிபுராவிலும் அந்தக் கட்சி ஆட்சியை இழந்தது. 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அங்கு மொத்தமிருக்கும் 60 தொகுதிகளில் 44 தொகுதிகளைப் பிடித்து பா.ஜ.க ஆட்சியமைத்தது. 2023-ல் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தற்போது அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
திரிபுராவில், அகர்தலா மாநகராட்சி உட்பட 14 மாநகராட்சி கவுன்சில் மற்றும் 6 நகரப் பஞ்சாயத்துகளிலிருக்கும் 334 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவற்றில், 112 இடங்களில் போட்டியின்றி பா.ஜ.க வெற்றிபெற்றது. மீதமிருக்கும் 222 இடங்களில் நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், 217 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது.
அகர்தலா நகராட்சியின் வரலாற்றில், எந்தவொரு எதிர்க் கட்சியும் ஓர் இடம்கூட வெற்றிபெறாதது இந்த முறைதான். அகர்தலா நகராட்சியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தை திரிணாமுல் காங்கிரஸ் பிடித்திருக்கிறது. அம்பாசா மாநகராட்சியில் திரிணாமுல் காங்கிரஸும், திரிபுரா ராயல் சியோன் பிரத்யோத் கிஷோர் தலைமையிலான டிப்ரா மோதாவும் தலா ஓர் இடத்தைப் பிடித்திருக்கின்றன.
Also Read: திரிபுரா: உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி; மார்க்சிஸ்ட் கட்சிக்குப் பெரும் பின்னடைவு!
இந்த வெற்றியால் பா.ஜ.க தலைவர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ``சிறந்த நிர்வாகத்துக்கு ஆதரவாக திரிபுரா மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்" என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.``திரிபுரா மக்கள் 98.50 சதவிகித இடங்களை பா.ஜ.க-வுக்கு அள்ளித்தந்திருக்கிறார்கள். இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி" என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் கூறியிருக்கிறார். மேலும் அவர், ``நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் நடைபெறும் வளர்ச்சிக்கு ஆதரவாக பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். திரிபுராவை அவமதிக்க முயன்றவர்களுக்கு தேர்தல் முடிவு தக்க பதிலடி கொடுத்திருக்கிறது" என்றும் கூறியிருக்கிறார்.
``திரிபுராவில் அமைதியைச் சீர்குலைக்க விரும்பிய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ(எம்) ஆகிய கட்சிகளின் சதிச்செயல்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். திரிபுரா ஒரு சிறிய மாநிலமாக இருந்தாலும், அதற்கென்று ஒரு கௌரவமும் கண்ணியமும் இருக்கிறது" என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார்.
மேலும், ``இந்த வெற்றியை மிதமிஞ்சிய அளவுக்கு கொண்டாடி, மக்கள் மத்தியில் பா.ஜ.க மீது வெறுப்பை உண்டாக்கிவிட வேண்டாம்" என்று பா.ஜ.க-வினரை உஷார்ப்படுத்தியிருக்கும் பா.ஜ.க தலைவர்கள், ``உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவரும், 2023-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மக்களின் பேராதரவைப் பெறும் வகையில் மக்களுடன் நெருக்கமாக இருந்து பொதுச்சேவை ஆற்ற வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
இன்னொருபுறம், திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், முறைகேடுகள் மற்றும் வன்முறை ஆகியவற்றின் மூலமாகவே பா.ஜ.க வெற்றிபெற்றிருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் குற்றம்சாட்டியிருக்கின்றன.
திரிபுரா இடது முன்னணியின் அமைப்பாளர் நாராயன் கர், தேர்தல் முடிவுகள் தொடர்பாக கூறுகையில், ``திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஒரு கேலிக்கூத்து. நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை காவல்துறையும மாநில தேர்தல் ஆணையமும் உறுதிசெய்யவில்லை. பா.ஜ.க-வின் ஆட்சியில் ஜனநாயகம், தேர்தல் நடைமுறை, மக்களின் வாக்குரிமை ஆகியவற்றின் மீதான தொடர் தாக்குதல்களிலிருந்து திரிபுராவைப் பாதுகாப்பதற்கு வரக்கூடிய நாள்களில் நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அகர்தலா மாநகராட்சி உட்பட ஐந்து உள்ளாட்சி அமைப்புகளில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், மறுதேர்தல் நடத்தவில்லையென்றால் வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணிப்போம் என்று இடதுமுன்னணி கூறியது. ஆனால், மறுதேர்தல் நடத்தப்படவில்லை.
மேற்கு வங்கத்தைத் தாண்டி பல மாநிலங்களில் கால்பதிக்க மம்தா பானர்ஜி முயற்சி செய்துவருகிறார். அந்த வகையில், திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், ஆளும் கட்சியான பா.ஜ.க-வே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில், ``திரிபுராவில் ஜனநாயகப் படுகொலை நடந்திருக்கிறது. எங்கள் கட்சி மிகப்பெரிய எதிர்க் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. வாக்குச்சாவடிகள் சூறையாடல், வன்முறைகள், எதிர்க் கட்சியினர் மீது தாக்குதல் என பா.ஜ.க வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு மத்தியில், சுமார் 20 சதவிகித வாக்குகளை நாங்கள் பெற்றிருக்கிறோம்" என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸின் பொதுச்செயலாளர் குணால் கோஷ், ``நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றிருந்தால், பா.ஜ.க-வால் வெற்றிபெற்றிருக்க முடியாது. எங்களுடைய அடுத்த பணியைத் தொடங்கிவிட்டோம். 2023-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்" என்று கூறியிருக்கிறார்.
1993-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக திரிபுரா இருந்தது. அந்த கோட்டையை 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க பிடித்தது. அதை தனது நிரந்தரக் கோட்டையாக பா.ஜ.க மாற்றுகிறதா? அந்த அளவுக்கு திரிபுராவில் மக்கள் செல்வாக்கை பா.ஜ.க பெற்றுவிட்டதா? என்ற கேள்விகளை எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான வீ.பா.கணேசன் முன்பாக வைத்தோம்.
``பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும்கூட, இப்போதும் மார்க்சிஸ்டுகளின் கோட்டையாகத்தான் திரிபுரா இருக்கிறது. மக்கள் மத்தியில் செல்வாக்குடன் மார்க்சிஸ்ட் கட்சி இருக்கிறது. 2018-ம் ஆண்டு முறையற்ற வழியில்தான், சட்டமன்றத்துக்குள் பா.ஜ.க நுழைந்தது. பா.ஜ.க-வுக்கு வன்முறை மட்டும்தான் பலமாக இருக்கிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் முழுக்க முழுக்க ஆட்சியதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி, இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பிரசாரமே செய்ய விடவில்லை. 2011-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்த பிறகு, அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இதேபோன்ற அராஜக நடவடிக்கைகளில் திரிணாமுல் காங்கிரஸார் ஈடுபட்டனர். அதே வேலையை திரிபுராவில் இப்போது பா.ஜ.க-வினர் செய்கிறார்கள். நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தினால், பா.ஜ.க அங்கு காணாமல் போய்விடும்" என்றார் வீ.பா.கணேசன்.
Also Read: கட்சி தாவும் தலைவர்கள்; கூட்டணியும் இல்லை... உத்தரப்பிரதேசத்தில் இனி மாயாவதியின் நிலை என்ன?!
திரிபுராவில் பா.ஜ.க பெற்றிருக்கும் வெற்றி குறித்தும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் பா.ஜ.க-வின் மாநில செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். ``பா.ஜ.க-வின் சிறந்த ஆட்சியை திரிபுரா மாநில மக்கள் முழுமையாக அங்கீகரித்திருக்கிறார்கள். அங்கு, பல ஆண்டுகளாக நடைபெற்ற கம்யூஸ்ட் கட்சியின் அராஜக ஆட்சியை இன்னும் மக்கள் மறக்கவில்லை என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
அதேபோல, மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சியிலிருந்து மம்தா பானர்ஜி இறக்கினார். அவர் கட்சியினர் அங்கு தொடர்ந்து வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். திரிபுராவிலும் கால் பதிக்க வேண்டும் என்று மம்தா முயற்சி செய்தார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸை திரிபுரா மக்கள் முற்றிலும் புறந்தள்ளியிருக்கிறார்கள். நியாயமான முறையில் பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது. இதை வன்முறை வெற்றி என்று சொன்னால், மேற்கு வங்கத்தில் மம்தா பெற்ற வெற்றியை வன்முறை வெற்றி என்று ஒப்புக்கொள்வாரா?" என்றார்.
from Latest News
0 Comments